புல்மோட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருகோணமலை - குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட புல்மோட்டை பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விடயத்துக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருகோணமலையை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக வருகை தந்த நால்வருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது மூன்று பெண்கள் உட்பட ஆணொருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து அவர்களுடன் தொடர்புகளை பேணிய 14 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இரண்டு பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் மொத்தமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை லிங்கு நகர்ப் பகுதியில் இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், கடந்த 23ஆம் திகதி திருகோணமலை டைக் வீதியில் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் திருகோணமலை நீதிமன்றில் கடமையாற்றி வருகின்ற ஊழியரொருவரின் தந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் 64 வயதுடையவர் எனவும் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அதிகமாக ஒன்று கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ந்து கொள்ளுமாறும், முகக் கவசங்களை தொடர்ந்தும் பாவிக்குமாறும் சுகாதார திணைக்களம் விடுக்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு திருகோணமலை சுகாதார சேவைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.