கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை அகற்றும் விவகாரம்! அடக்கம், தகனம் நிபுணர் குழுவால் பரிந்துரை
கொரோனா வைரஸால் மரணமாவோரின் சடலங்களை அகற்றுவது தொடர்பான பிரச்சினையை ஆய்வு செய்ய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, அடக்கம் மற்றும் தகனம் ஆகிய இரண்டையும் பரிந்துரைத்துள்ளது.
கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கட்டாயமாக தகனம் செய்வதற்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டமையை அடுத்து அது தொடர்பாக ஆராய இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருந்தது.
சமூக ஊடகங்களில் கசிந்த தனது அறிக்கையின்படி, அந்தக் குழு தமது பரிந்துரை மற்றும் இறந்த உடல்களை பிரத்தியேகமாக தகனம் செய்வது குறித்த வழிகாட்டுதல்களில் உறுதியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது என ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
எனினும் குறிப்பிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கும் போது, தகனம் மற்றும் அடக்கம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய உடல்களை அகற்றும் வகையில் பரிந்துரைகளை திருத்தியுள்ளதாக நிபுணர் குழு கூறுகிறது.
கொரோனாவினால் இறந்த ஒருவரை 24 மணி நேரத்திற்குள் இரட்டை அடுக்கு உடல் பையில் வைத்து இறுதிக் கிரியைகளை நடத்த வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.
அடக்கம் செய்யப்பட்ட பின்னர் நீர் மாசுபடுவதன் மூலம் வைரஸ் பரவுகிறது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்றும் நிபுணர் குழு கூறுகிறது.
இறந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கு அவர்களது குடும்பங்கள் பின்பற்றும் செயல்முறை முழுவதையும் முடிந்தவரை மதிக்க வேண்டும் மற்றும் பாதுகாக்க வேண்டும் என்றும் நிபுணர் குழு குறிப்பிடுகிறது.
பதினொருவரை கொண்ட இந்த நிபுணர் குழு பேராசிரியர் ஜெனிஃபர் பெரேரா தலைமையில் பேராசிரியர் நீலிகா மாவலகே மற்றும் துறைசார் நிபுணர்களை கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



