சுவிஸில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பெப்ரவரி வரையில் நீடிப்பு! வெளியானது அறிவிப்பு
சுவிற்சர்லாந்து அரசின் 06.01.2021 அறிவிப்பு
- உணவகங்கள் பெப்ரவரி 2021 வரை மூடப்பட்டிருக்கும். மேலதிக முடிவு 13. 01. 2020 எடுக்கப்படும்.
- அதுபோல் அனைத்து பண்பாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிலையங்களும் பூட்டப்பட்டிருக்கும்.
- அனைத்துக் கடைகளும் இரவு 19.00 மணிமுதல் காலை 06.00 மணிவரை பூட்டப்பட்டிருக்கும்.
- பனிச் சறுக்கும் திடல்கள் தொடர்பான முடிவுகளை தொடர்ந்தும் மாநில அரசுகளே தீர்மானிக்கும்
இன்றைய கணக்கின்படி 4808 புதிய மகுடநுண்ணித் தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளது. 65 இறப்புக்கள் 24 மணிநேரத்தில் நடந்திருக்கின்றன.
2021இல் சுவிசில் மகுடநுண்ணித் தொற்றின் நிலை
இக்கேள்விக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் அலான் பெர்சே, 2020ம் ஆண்டு நிறைவடையும்போது இருந்ததுபோல் ஆண்டுத் தொடக்கம் தொடர்ந்து நன்றாக இல்லை எனலாம். நோய்த் தொற்று நாம் எதிர்பார்த்த கட்டுப்பாட்டுக்குள் அமையவில்லை என்றார்.
உருமாறிய புதிய மகுடநுண்ணியின் பாதிப்பு பழைய நுண்ணியைவிட அதிகமாக இல்லை, எனினும் அது பரவும் வேகம் அதிமாக உள்ளமை எமக்கு கவலை அளிக்கின்றது.
ஆகவே நாம் அறிவித்த நடைமுறைகளை மேலும் ஐந்து வாரங்களுக்கு நீடிக்கும் முடிவிற்கு வந்துள்ளோம். இதன்படி பெப்ரவரி 2021 வரை தற்போதைய நடவடிக்கைகள் தொடரும் என்றார்.
அதேவேளை அனைத்து மாநிலங்களுடனும் கலந்துபேசி 13.01.2021 எமது நடவடிக்கைகளை தெரிவிப்போம் என்றார் சுகாதர அமைச்சர்.
ஏன் 13.01.2021 வரை சுவிஸ் அரசு புதிய நடைமுறையினை அறிவிக்க காத்திருக்கின்றது என்ற கேள்வியை ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது முதலில் தாம் மாநில அரசுகளுடன் கூடிப்பேச வேண்டி உள்ளது. இதற்கு தமக்கு சில நாட்கள் தேவையாக உள்ளது என்றார் பெர்சே.
ஏன் கடுமையான அறிவிப்பு வரவில்லை?
கடந்த காலத்தை திரும்பிப்பார்க்கும்போது நாம் எடுத்த முடிவுகளை சரியா என ஒப்பிடலாம். ஆனால் நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்துக் குழுக்களுக்கும் பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும்.
இப்போது சுவிஸ் எடுக்கவுள்ள முடிவுகளும் தற்போதைய சூழலிற்கு பொருத்தமானதா இருக்க வேண்டும். இப்போது சுவிஸ் எடுக்கும் முடிவு பிரித்தானியா எதிர்கொள்ளும் சூழலை சுவிஸ் எதிர்கொள்ளாது காக்கும் என நம்புவதாக சுகாதார அமைச்சர் பெர்சே தெரிவித்தார்.
சுவிஸ் இதுவரை எடுத்த முடிவுகள் நிலவும் சூழலிற்கு ஏற்ப எட்டப்பட்டதாகும். அரசின் நடவடிக்கை மக்களைப் பாதிக்காது நோய்ப் பரவலைத் தடுப்பதாக அமைய வேண்டும்.
நாம் மிகுந்த கடுமையான நடவடிக்கைகளை அறிவித்து அதுதொடர்பில் வாதங்கள் மட்டும் நடைபெறுவது யாருக்கும் நலமில்லை. ஆகவே சூழலிற்கு ஏற்ப முடிவுகள் எட்டப்படுகின்றது என்றார் பெர்சே.
மூன்றாவது அலையை தடுக்க விரும்புகின்றோம்
தற்போதைய நிலையில் சுவிஸ் முழுவதும் எதிர்பார்த்தளவு தொற்றின் தொகை குறையவில்லை. ஆகவே 18.12.2020 அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளை 22.01.2021 தாண்டியும் தொடர வேண்டி உள்ளது,
உணவகங்கள், பண்பாட்டு, விளையாட்டு, பொதுழுதுபோக்கு நிலையங்கள் தொடர்ந்து பெப்ரவரி 2021 வரை பூட்டியிருக்க வேண்டும் என்றார் அலான் பெர்சே.
நோய்த் தொற்றுக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் மாநிலங்களில் இவ்விதிகளை தளர்த்தினால் அண்டைய மாநிலத்தில் இருந்து தளர்த்தப்பட்ட மாநிலத்திற்குள் மக்கள் சுற்றுலாப்பயணிகளாகப் புறப்படுவதைத் தடுப்பதற்கு சுவிற்சர்லாந்து நாடு முழுவதும் ஒரே விதி ஒழுகப்படுவதாகவும், 09.01.2021 முதல் மகுடநுண்ணி நோய்தடுப்பு தனிவகை சூழல் சட்டம் அமுலுக்கு வருவதாக பெர்சே குறிப்பிட்டார்.
கடந்த நாட்களில் சுவிஸ் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் மக்கள் அதனால் அடையும் சோர்வையும் நாமும் உணர்கின்றோம். நாங்கள் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்தும் மூன்றாவது ஒரு நோய்ப்பரவு அலையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆகும்.
அனைத்து தரப்பினர்களுக்கும் பொருத்தமான பொது வழியை நாம் தேடிப் பயணிக்கின்றோம். மக்களின் ஒற்றுமையும் புரிந்துணர்வும் இப்பணிகளுக்கு மிகத் தேவையாகும் என்றார் சுகாதார அமைச்சர்.
மாநிலங்கள்
எமது அண்டைய நாடுகள் எடுத்துக்காட்டாக ஜேர்மனி மிக இறுக்கமான நோய்த்தடுப்பு நடைமுறைகளை அறிவித்து முடக்கத்தினை ஒழுகுகின்றனர். இப்போது சுவிசில் வேறுவிதமான இறுக்கம் இருப்பினும் முழு முடக்கம் இல்லை.
விருந்தோம்பல் துறையும், பண்பாட்டு மற்றும் விளையாட்டுத் துறைகளும் சற்று பாதிக்கப்பட்டிருந்தாலும் நாம் கடுமையான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை.
மேலும் தளர்வுகளை நாம் இப்போது அறிவிக்கமுடியாத சூழல் நிலவுகின்றது. இன்று சுவிற்சர்லாந்து நடுவனரசு மாநிலங்களிடத்தில் கலந்தறிதலிற்கு வாய்ப்பளித்துள்ளோம். இவர்கள் இனி உரிய முடிவுகளைத் தீர்மானிக்க வேண்டும்.
விருந்தோம்பல்துறை எதிர்கொள்ளவுள்ள சூழல் என்ன?
22.01.2021 பின்னர் விருந்தோம்பல் துறை எதிர்கொள்ள கலந்தறிதல், மதியுரை பெறுதல் ஆகிய செயல்முறைகளுக்குப்பின்னரே உறுதியாக சொல்லமுடியும்.
உணவகங்கள் திறப்பதற்கு தடை தொடரப்பட்டால் பொருளாதர ஈடுவழங்கும் அரசின் நடவடிக்கையும் நீடிக்கப்படும். அதுபோல் பொருளாதார இழப்பிற்கு ஈடு வழங்கும் திட்டங்களும் விரிவடையும் என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
தடுப்பூசி
சுவிற்சர்லாந்து அரசு முற்பதிவு செய்த 15 மில்லியன் தடுப்பூசிகள் சுவிஸ் நோக்கி வந்துள்ளது. நாம் கோடை காலத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி இட்டுவிடுவோம் என நம்புகின்றோம் என்றார் பெர்சே.
பன்னாட்டு ஒப்பீட்டில் தடுப்பூசி இடும் சுவிசின் செயற்பாடுகள் சிறப்பாக அமைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் சுவிஸ் மக்களில் 2.7 வீத மக்களுக்கு தடுப்பூசி இடப்பட்டிருக்கும் என நம்புகின்றோம்.
இக்காலத்தில் பலர் தன்முயற்சியில் தடுப்பூசி இடுவதற்கான ஒருதனிப்பட்ட தவணை பெறுவதற்கு முயன்றிருப்பர். சற்றுப் பொறுமைகாத்துக்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளோம்.
மகுடநுண்ணித் தொற்றால் அடங்கைக்கு (ஆபத்திற்கு) உட்பட்ட முன் நோய் உள்ள அனைவருக்கும் பனிகாலத்திற்குள் தடுப்பூசி இடப்பட்டிருக்கும் எனத் தாம் நம்புவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
சுவிஸ் அரசு ஏன் மேலும் தடுப்பூசிகளை முற்பதிவு செய்யவில்லை என்ற கேள்விக்கு அமைச்சர் பெர்சே இவ்வாறு பதிலளித்தார், “எம்மிடம் உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் இடுவதற்கான வலு உள்ளது, இருப்பினும் மேலும் தேவை ஏற்பட்டால் போதியளவு பெற்றுக்கொள்ள சுவிசிற்கு வாய்ப்புள்ளது”
இரண்டாவது தடுப்பூசி?
இரண்டாவது தடுப்பூசியலகு இடுவது தொடர்பான முடிவு சுவிஸ் அரசால் ஒழுங்குசெய்யப்பட்ட நோய்த்தடுப்பு சிறப்புக் குழுவின் பரிந்துரைக்கு அமைய அறிவிக்கப்படும்.
தடுப்பூசி இடும் முறமை தொடர்பான சரியான முடிவு கலந்தாய்வில் உள்ளது. தற்போதைய மதியுரையின்படி முதலாவது ஊசி இடப்பட்டு 3 அல்லது 4 கிழமை கழித்து அடுத்த ஊசி இடுவதாக உள்ளது.
சுவிஸ் சுகாதாரத்துறையின் விஞ்ஞான ஆய்வின்படி இம்முறமையினை நாம் தொடர்வோம். தற்காகலிகமாக தடுப்பூசித் தட்டுப்பாடு ஏற்பட்டால், அதற்கேற்ப கால இடைவெளியை மாற்றிக்கொள்வோம் என அறிவிக்கப்பட்டது.
பாடசாலைகள் மூடப்படுமா?
இல்லை. நாம் பாடசாலைகளை பூட்டுவதற்கு எண்ணவில்லை என்றார் சுகாதார அமைச்சர். மேலும் பாடசாலைகள் மூடுவது தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மாநிலங்களிடம் உள்ளது.
நோய்த்தொற்றுப் பரவல் கட்டுக்கடங்காவிடின் இவ்வாறானதொரு முடிவினை எடுக்க மாநில அரசுகளே முன்வரவேண்டும் என்றார்.
ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்படுமா?
எதிர்வரும் நாட்களில் தனிப்பட்டு சந்திக்க 5 ஆட்களுக்கும் பொது இடத்திலும் அதே தொகையும் அறிவிக்கப்படாலாம். தற்போது முறையே 10, 15 ஆட்களுக்கு ஒன்றுகூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 13.01.2021 அறிவிப்பே உரிய தெளிவைத் தரும்.