சாகல ரத்நாயக்கவின் கையொப்பத்தை போலியாக இட்ட பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல் உத்தரவு
ஜனாதிபதியின் அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்கவின் கையொப்பம் மற்றும் உத்தியோகபூர்வ முத்திரையை போலியாக தயாரித்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரை எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டார்.
போலி கையொப்பம்
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சாகல ரத்நாயக்கவின் கையொப்பத்தினை பயன்படுத்தி வடமத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பி 14 பொலிஸ் உத்தியோகத்தர்களை வெவ்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த கடிதம் தொடர்பில் சந்தேகம் கொண்ட வடமத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், அதன் நம்பகத்தன்மை குறித்து ஜனாதிபதி செயலகத்தில் வினவியபோது, அவ்வாறான கடிதம் எதுவும் சாகல ரத்நாயக்கவினால் அனுப்பப்படவில்லை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை
ஆரம்பித்து போலியாக செயற்பட்ட பொலிஸ் பரிசோதகரை கைது செய்தனர்.