பசுக்களை கடத்திய வழக்கு: தலைமறைவாகியுள்ள பொலிஸ் பொறுப்பதிகாரியின் சொத்துக்கள் முடக்கம்
பசுக்களை கடத்திய வழக்கு தொடர்பாக தேடப்பட்டு கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வரும் வெலிகந்த பொலிஸ் நிலை முன்னாள் பொறுப்பதிகாரிக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் முடக்க பொலன்னறுவை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.எம். ரத்நாயக்க என்ற இந்த பொறுப்பதிகாரிக்கு, 2025 மார்ச் 11 அன்று கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தில் முன்னிலை
எனினும் தற்போது இணைக்கப்பட்டுள்ள பூஜாபிட்டிய பொலிஸில் இருந்து, அவர் நோய்வாய்ப்பட்ட விடுப்பில் சென்றநிலையில், பிரதேசத்தை விட்டு வெளியேறிவிட்டதாக அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
2024 செப்டம்பர் 23, அன்று, செல்லுபடியாகும் அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 20 கறவை பசுக்களை கைப்பற்றி அப்போது வெலிகந்த பொறுப்பதிகாரியாக பணியாற்றிய ரத்நாயக்க, பொலன்னறுவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினார்.
இந்தநிலையில் குறித்த பசுக்களை அரசுக்குச் சொந்தமான கால்நடைப் பண்ணைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், ரத்நாயக்கவின் உத்தரவின் பேரில் பசுக்கள் கடத்தல்காரர்களிடம் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது.
குற்றச்சாட்டுகளை விசாரிக்க பொலிஸ் மா அதிபர், அனுராதபுரத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவை அமைத்தார் அன்று முதலே பொறுப்பதிகாரியான ரத்நாயக்க தலைமறைவாக உள்ளார்.
சொத்துக்கள் பறிமுதல்
இந்தநிலையில் நேற்று மார்ச் 25ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதும் சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிவிட்டார்.
[YKNX8T
இதனையடுத்தே, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை பயன்படுத்தி, ரத்நாயக்கவின் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் பறிமுதல் செய்து நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி அன்வர் சதக் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர் வைத்திருக்கும் அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளையும் முடக்குமாறு மத்திய வங்கி ஆளுநருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அவருக்கு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ரத்நாயக்க ஏப்ரல் 29 ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் முன்னிலையாகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.