புலிகளுடன் பல்வேறு பொறிமுறைமைகளில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது – அரசாங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பல்வேறு பொறிமுறைமைகளில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மிகக் கொடூரமான தந்திரோபாயங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் பின்பற்றிய நிலையில் எப்படியாவது புலிகளை ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள முயற்சிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
அப்பாவி பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன் அரச சொத்துக்கள் பாரியளவில் இழக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேச்சுவார்த்தைகளில் இணைந்து கொள்ளுமாறு பல்வேறு வழிகளில் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் புலிகள் இனவாத அடிப்படையில் கொடூரமான ஆயுத போராட்டத்தை முன்னெடுத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியில் அரசாங்கம் மாற்று வழியின்றி போரில் மனிதாபிமான மீட்புப் பணிகளை மேற்கொண்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமை மற்றும் சட்டம் ஒழுங்கு விவகாரப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய முனைப்புடன் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.