யாழ். பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்ட பட்டமளிப்பு விழா - கௌரவிக்கப்படவுள்ள 3 411 மாணவர்கள்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 8ஆம் திகதி வியாழக்கிழமை வரையான மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டமளிப்பு விழாவின் ஒன்பது அமர்வுகளும் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.
இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவிளக்க நிகழ்வு நேற்று (02.10.2026) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில், பல்கலைக்கழக சபை அறையில் இடம்பெற்றது.
பட்டமளிப்பு விழாவின் இடம்பெறவுள்ள நிகழ்வுகள்
இதன்போது, துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி ஆங்கிலத்திலும், பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக் குழுத் தலைவரும், கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தமிழிலும் பட்டமளிப்பு நிகழ்வு தொடர்பில் விளக்கமளித்தனர்.

பல்கலைக்கழகப் பதிவாளர் வி. காண்டீபன், கல்வி விவகாரங்கள் மற்றும் வெளியீடுகள் கிளையின் சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எஸ். கே. பிரபாகரன் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களைப் பெறவுள்ள மாணவர்களின் விவரங்கள் தொடர்பான அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள தரவுகளின் அடிப்படையில் பட்டமளிப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டமளிப்பு விழாவுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில், பட்டமளிப்பைத் தொடர்ந்து நடைபெறவுள்ள கலை, கலாசார நிகழ்வுகள் எதிர்வரும் 10.10.2026 அன்று பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பிற்பகல் 3.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ளன. இதனைத் தொடர்ந்து மேலும் பல முக்கிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


