தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் சகோதர மொழி பேசுபவர்களும் இணைவு! (Video)
புதிய இணைப்பு
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டமானது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் இன்றையதினம் தென் இலங்கையில் இருந்து சகோதர மொழி பேசும் ஒரு குழுவினர் குறித்த பகுதிக்கு வந்து, திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் குழுவினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு தென்னிலங்கையிலிருந்து தையிட்டி சட்டவிரோத விகாரைக்கெதிரான போராட்டக் களத்திற்கு வருகை தந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சில முற்போக்கு வாதிகளுக்கு, சட்டவிரோத விகாரை தொடர்பான ஆக்கிரமிப்புக்களை சட்டத்தரணி காண்டீபன் விளங்கப்படுத்தியள்ளதாக கூறப்படுகிறது.
முதலாம் இணைப்பு
யாழ். தையிட்டி சிவன் ஆலயத்தில் பொங்கலிட்டு வழிபட்டவர்களுடன் பொலிஸார் முரண்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தையிட்டியில் அமைக்கப்பட்ட சட்டவிரோத விகாரைக்கெதிராக ஒவ்வொரு போயா தினத்திலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்படும் போராட்டம் நேற்று (28.10.2023) மாலை ஆரம்பமானது.
போயா தினமான இன்று (28.10.2023) குறித்த விகாரைக்கு தென்னிலங்கையிலிருந்து சிங்கள மக்கள் வழிபாடுகளுக்காக அழைத்து வரப்பட்ட சம காலப்பரப்பில் தையிட்டி விகாரைக்கு அண்மையிலுள்ள சிவன் கோயிலில் போராட்டக்காரர்களால் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ள ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸார் நடவடிக்கை
இந்நிலையில், சிவன் ஆலயத்தில் ஒலிபரப்பப்படும் பக்திப் பாடல்களானது திஸ்ஸ விகாரையில் மேற்கொள்ளப்படும் பிரித் ஓதுதலுக்கு இடையூறாக காணப்படுவதாக கூறியே பொங்கல் வழிபாடுகளை மேற்கொண்டவர்களுடன் பொலிஸார் முரண்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரித் ஓதும் சத்தம் தமக்கும் கேட்பதாகவும், அதனை நிறுத்தினால் தாமும் பாடல் சத்தத்தை குறைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இறுதியில் இரு தரப்பினரதும் செயற்பாடுகளைத் தடுக்க பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.