சர்ச்சைக்குரிய மல்வானை ஆடம்பர மாளிகை : மகிந்தவின் ஆஸ்தான சோதிடர் வாக்குமூலம்
கடந்த காலத்தில் பாரிய சர்ச்சையைத் தோற்றுவித்த மல்வானை ஆடம்பர மாளிகை, பசில் ராஜபக்சவினுடையதுதான் (Basil Rajapaksa) என்று மகிந்த ராஜபக்சவின் ஆஸ்தான சோதிடர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆஸ்தான சோதிடரான சுமணதாச அபேகுணவர்த்தன, இணையத்தள செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரண பொதுமகனால் நிர்மாணிக்க முடியாது
மல்வானையில் அமைக்கப்பட்டுள்ள ஆடம்பர மாளிகைக்கு அடிக்கல் நாட்டுவதற்கான சுபமுகூர்த்தம் தன்னால் குறித்துக் கொடுக்கப்பட்டது என்றும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஷ்பா ராஜபக்சவின் வேண்டுகோளுக்கு இணங்க அதனை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கடந்த காலங்களில் குறித்த மாளிகை தன்னுடையது இல்லையென்று பசில் ராஜபக்ச மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அது அரசாங்கத்தினால் கையேற்கப்பட்டு பாழடைந்து போயுள்ளது.
அவ்வாறான பாரிய மாளிகையொன்றை சாதாரண பொதுமகன் ஒருவரால் நிர்மாணிக்க முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ள சுமணதாச அபேகுணவர்த்தன, பசில் ராஜபக்ச அதன் உரிமையாளர் இல்லை என்று கூறுவதையும் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |