சர்ச்சையை கிளப்பிய பிரித்தானியா சுகாதார செயலாளரின் பதிவு!
சர்ச்சையை கிளப்பிய தவறான கருத்தை தெரிவித்ததற்காக பிரித்தானியா சுகாதார செயலாளர் சாஜித் ஜாவித் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்த பிரித்தானியா சுகாதார செயலாளருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.
இந்நிலையில், சனிக்கிழமையன்று தான் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதாக ட்விட்டரில் பதிவிட்ட ஜாவித், தனக்கு லேசான அறிகுறிகள் இருந்ததாகவும், அருமையான தடுப்பூசிக்கும் நன்றி என தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, தற்போது தடுப்பூசி போடாத மக்களை உடனடியாக தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், கொரோனா ரைவஸிக்கு பயந்து நடுங்குவதை விட அத்துடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என பதிவிட்டார்.
இந்த பதிவுக்கு கொரோனாவால் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் மற்றும் எதிர்கட்சி எம்.பிக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்னர்.
இந்த கருத்து மக்களை பாதுகாத்தவர்களையும், ஊரடங்கின் போது வீட்டிலேயே இருந்தவர்களையும் அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சர்ச்சையை ஏற்படுத்திய பதிவை நீக்கிய ஜாவித், அதற்கு மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தடுப்பூசிகள் கொரோனாவை எதிர்த்து போராட உதவுகின்றன என்று நான் நன்றியைத் தெரிவிக்கவே அந்த பதிவை பதிவிட்டேன். ஆனால், அது ஒரு தவறான வார்த்தையாக இருந்தது.
அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.
பலரைப் போலவே, இந்த மோசமான வைரஸால் நானும் நேசித்தவர்களை இழந்துவிட்டேன், அதன் தாக்கத்தை ஒருபோதும் குறைத்து மதிப்பிடமாட்டேன் என ஜாவித் தெரிவித்துள்ளார்.