சர்ச்சைக்குரிய ஆண்டியர் சுற்றுச் சந்தி வழக்கு: காரணங்காட்டல் விசாரணைகளுக்குத் தவணை
சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆண்டியர் சந்தியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டமுரணான சுற்றுச் சந்தி கட்டுமானத்திற்கு எதிராக சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.மாஹிரால் தொடரப்பட்ட வழக்கு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றின் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் படி "அபிவிருத்திப் பிரதேசமாக" வர்த்தமானியின் மூலம் பிரகடனம் செய்யப்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் யாவும் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அதிகாரம் கையளிக்கப்பட்ட குறித்த பிரதேசம் அமையப் பெற்றுள்ள உள்ளூராட்சி அதிகார சபையின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்நிலையில், மேற்படி சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆண்டியர் சந்தியில் சம்மாந்துறை பிரதேச சபையின் அனுமதியைப் பெறாமல் பல்வேறு தொழிநுட்பக் குறைபாடுகளோடு வீதி அபிவிருத்தி அதிகார சபையானது சட்டமுரணாக மேற்கொண்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரித் தொடரப்பட்டுள்ள குறித்த வழக்கில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், நிறைவேற்றுப் பொறியியலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
விசாரணை நடவடிக்கை
நேற்று மன்றில் பிரதிவாதிகள் சார்பில் பிரசன்னமாகியிருந்த அரச சட்டவாதி இவ்வழக்கை முன்கொண்டு செல்வது தொடர்பில் தமது பூர்வாங்க ஆட்சேபனைகளைத் தெரிவித்தார்.
மேற்படி ஆட்சேபனைகளை நிராகரித்த மன்றானது வழக்கை காரணங்காட்டல் விசாரணைகளுக்காக திகதியிட்டிருந்தது. இந்நிலையில், சம்மாந்துறை நீதிவான் கடந்த 20.01.2026யில் ஆண்டியர் சந்தியை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துத் தொடர்பான விடயங்களைச் சுட்டிக்காட்டி குறித்த ஆண்டியர் சந்தியில் சிதிலமடைந்துள்ள வீதியைச் செப்பனிடுவது தொடர்பில் மனுதாரரின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்தார்.

இச்சந்தர்ப்பத்தில் மனுதாரரான சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம் மாஹிர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் சமர்ப்பணங்களை மேற்கொண்டு குறித்த ஆண்டியர் சந்தியில் சிதிலமடைந்துள்ள வீதியை புனரமைக்குமாறு கோரி பிரதேச சபைக்கு தொடர்ந்தேர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும். எனவே குறித்த ஆண்டியர் சந்தியில் சிதிலமடைந்துள்ள
வீதியை மாத்திரம் பொதுமக்களின் நலன்கருதி புனரமைக்க மனுதாரருக்கு எவ்வித ஆட்சேபனைகளும் கிடையாது எனவும் குறித்த சந்தியில் சட்டமுரணாக அமைக்கப்பட்டு வரும் சுற்றுச் சந்தி மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்தும் தற்போதுள்ள நிலமையை (Status Quo) பேணுமாறு கட்டளையாக்குமாறும் மன்றைக் கோரியிருந்தார்.
மேற்படி விண்ணப்பத்துக்கு அமைவாக சம்மாந்துறை நீதிவான் அவர்கள் இன்றிலிருந்து இரு வாரங்களுக்குள் குறித்த சந்தியில் குன்றும் குளியுமாக சேதமடைந்துள்ள பாதையை மாத்திரம் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக செப்பனிடுமாறும் சுற்றுச் சந்தி மற்றும் நடைபாதை மீது எச்சந்தர்பத்திலும் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் இதுதொடர்பில் கடந்த தவணையில் ஆக்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக உள்ளதை உள்ளபடி (Staus Quo) பேணுமாறும் கட்டளையாக்கினார்.
இவ்வழக்கானது மீண்டும் எதிர்வரும் 21.04.2026 யில் பிரதிவாதிகள் சார்பான காரணங்காட்டும் விசாரணைகளுக்காக (Show cause inquiry) திகதியிடப்பட்டுள்ளது.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 17 மணி நேரம் முன்
சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகாவிற்கு அழகாக நடந்து முடிந்த சீமந்தம்... போட்டோஸ் இதோ Cineulagam