வவுனியாவில் மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு போக்குவரத்து பொலிஸாரால் கட்டுப்பாடு
வவுனியா மாவட்டத்தில் இது வரையிலான காலமும் மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு இலக்கத்தகடு, வாகன வருமான உத்தரவு பத்திரம், காப்புறுதி, தலைக்கவசம் என்பவற்றை பொலிஸார் கண்காணிக்காத நிலையில், தற்போது வவுனியா பொலிஸாரினால் குறித்த ஆவணங்கள் மற்றும் தலைக்கவசம் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
குறித்த ஆவணங்கள் இன்றி பயணித்த மூன்று மின்சார மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றியதுடன், குறித்த மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வவுனியா நீதவான் நீதிமன்றிலும் வழக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு இது வரையிலான காலப்பகுதியில் தலைக்கவசம் உட்பட மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் தேவையின்றி காணப்பட்டது.
இந்நிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலக்கத்தகடு, வாகன வருமான உத்தரவு பத்திரம், காப்புறுதி, தலைக்கவசம் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீறிச் செயற்படும் மின்சார மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வவுனியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், வவுனியாவின் பல இடங்களில் பரவலாகக் குறித்த மின்சார மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்யும் முகவர்கள் எவ்வித ஆவணங்கள், தலைக்கவசம் என்பன தேவையில்லை எனத் தெரிவித்து மக்களை ஏமாற்றி விற்பனை மேற்கொள்ளுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், அவ்வாறு விற்பனை செய்யும் முகவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.









