இரணைமடுவிலிருந்து கிளிநொச்சிக்கான நீரை பெறுவதற்கான மகஜர் கையளிப்பு
இரணைமடுக் குளத்திலிருந்து கிளிநொச்சிக்கான குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்காக அடையாளம் காணப்பட்ட மூன்று இடங்களிலிருந்து நீரைப் பெறுவதற்கான மகஜரை இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளனர்.
குறித்த மகஜர் கையளிப்பு நடவடிக்கை இன்றைய தினம் (22.12.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கிளிநொச்சி குளத்திலிருந்து நீரைப் பெற்று சுத்திகரித்து மக்களுக்கு வழங்குகின்றது.
அடையாளம் காணப்பட்ட இடங்கள்
கிளிநொச்சி குளத்தின் நீரின் தரம் மழை காலங்களில் குறைவாக காணப்படுகின்ற நிலையில் இரணைமடுக் குளத்திலிருந்து நீரைப் பெற்றுக் கொள்வதற்கு இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் அமைப்புக்களுடனும் மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர், பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர், பொறியியலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து மூன்று இடங்களை அடையாளம் காட்டியிருந்தனர்.
இந்த நிலையில் கிளிநொச்சி குளம் வான் பாய்கின்ற பகுதி, கோவிந்தன் கடை சந்தி, தற்போது திருவையாறு ஏற்று நீர்ப்பாசனம் இயங்கி வருகின்ற பகுதி என்பவற்றை அடையாளங்காட்டி அதற்கான ஒப்புதலை மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜராக கையளித்துள்ளனர்.

