மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் கனமழை : வான் கதவுகள் திறப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தின் பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் பொது மக்களை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி சுப்ரமணியம் ரமேஸ் தெரிவித்துள்ளார்.
அதிகளவு மழைவீழ்ச்சி
கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 62.6 மில்லி லீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் தொடந்தும் மழைபெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பின் பிரதான குளங்களான உன்னிச்சை, நவகிரி, புலுக்குணாவ, கித்துள் ஆகிய குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக உன்னிச்சை குளத்தின் 3 வான் கதவுகள் இரண்டு அடியும், நவகிரி குளத்தின் 2 வான் கதவுகள் சுமார் ஐந்து அடிகள் வரையும் ரூகம் குளத்தின் 2 வான் கதவுகள் ஆறு அடிகள் வரை திறக்கப்பட்டுள்ளன.
நவகிரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மண்டூர் –வெல்லாவெளி மற்றும் மண்டூர்-இராணமடு பிரதான போக்குவரத்துப்பாதை ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
உன்னிச்சைகுளம் வான் கதவு திறக்கப்பட்டுள்ளதனால் வவுணதீவு பகுதியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் காணப்படுகின்றன.இதேநேரம் ரூகம் மற்றும் கித்துள் குளங்கள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையில் உள்ளன.
இதேநேரம் குறித்த பிரதேச செயலகம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையால் அப்பகுதியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகளை போரதீவுப்பற்று பிரதேசசபையினர் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் மட்டக்களப்பு மாவட்ட போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளர் கௌரிபாலன் தலைமையில் இது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |