மன்னார் காற்றாலை மின் கோபுர நடவடிக்கைக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுக்கப்படும் போராட்டம்
மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி 2வது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கைக்கு எதிராக 7ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராம மக்களும் கலந்து கொண்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
-மன்னார் தீவு பகுதியில் 2வது கட்டமாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (3) பாரிய காற்றாலைகளின் பாகங்கள் வாகனங்களில் மன்னார் நகர பகுதியை நோக்கி எடுத்து வரப்பட்ட நிலையில் மன்னார் தள்ளாடி சந்தியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன்
இந்த நிலையில் தள்ளாடி சந்தி மற்றும் மன்னார் சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக மக்களும், பொது அமைப்புக்கள் இணைந்து சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில், மக்களின் எதிர்ப்பையும் மீறி காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பாகங்கள் மன்னார் நகர பகுதிக்கு பலத்த பொலிஸாரின் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது.
எனினும் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம் பெற்று வந்த நிலையில் குறித்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பேருந்துகள் மூலம் இன்றையதினம்(9) வருகை தந்து குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கினர்.
குறிப்பாக மன்னார் தீவுப்பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்ட காற்றாலை மின் கோபுரங்களினால் கடற்றொழிலாளர்கள் பாரிய அளவில் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு,காற்றாலைகள் காணப்படும் பகுதிகளில் வசித்து வருகின்ற மக்கள், குறிப்பாக வயோதிபர்கள், சிறுவர்கள், கர்ப்பினித்தாய்மார்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
இரு திட்டங்களையும் நிறுத்த
மேலும் காற்றாலை கோபுரங்கள் அமைத்ததன் காரணமாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளினால் அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக பேசாலை கிராமம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாரிய வெள்ள நீர் தேங்கிய நிலையில் அவற்றை கடலுக்குள் செலுத்த தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகவும் அந்த மக்கள் தெரிவித்தனர்.
மன்னார் தீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கணிய மணல் அகழ்வுக்கு நாங்கள் ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டோம் எனவும் மன்னார் தீவை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் குறித்த இரு திட்டங்களையும் நிறுத்த ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மன்னார் நகர சுற்று வட்டத்தில் இருந்து பதாகைகளை ஏந்தியவாறு மாவட்டச் செயலக பிரதான வீதியூடாக சென்று மீண்டும் நகர சுற்று வட்ட பகுதியை சென்றடைந்த பின்னர் நகர சுற்றுவட்ட பகுதியில் தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா




