சுவிட்சர்லாந்து நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய பெரும் தொகை பணம்!
இலங்கையில் விற்பனை செய்யப்படும் சில பொருட்களுக்கு பாதுகாப்பு ஸ்டிக்கர் அறிமுகப்படுத்தும் நோக்கில்,பாவனையாளர் அதிகார சபை உயர் அதிகாரிகள் குழுவொன்று சுவிட்சர்லாந்து நிறுவனத்துடன் சட்டவிரோதமாக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
அதனால் குறித்த நிறுவனத்துக்கு ரூபாய் 2.716 பில்லியன் (2.716) இற்கும் அதிகமான இழப்பீடு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, முன்னாள் அதிகாரியும் இலங்கை மக்கள் சட்சியின் பொதுச் செயலாளருமான அஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
முறையற்ற ஒப்பந்தம்
2014 ஜனவரி 24 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி இன்றி இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாகவும், இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்,பாவனையாளர் அதிகார சபையின் 12 பேருக்கு மேற்பட்ட அதிகாரிகள் மொரோக்கோவிற்கு இரண்டு வார சுற்றுப்பயணம் வழங்கப்பட்டதாகவும், கணக்காய்வுத் திணைக்களத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடியான ஒப்பந்தம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தாலும் , இதுவரை முறையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
மேலும், இந்த ஊழல் ஒப்பந்தத்தில் தொடர்புடையவர்கள் தற்போதைய நிலையிலும் உயர்ந்த பதவிகளில் உள்ளனர். ஜனாதிபதியின் தலையீட்டின் மூலம் குறைந்தது நியாயமான விசாரணையாவது நடத்தப்படும் என்ற நம்பிக்கையில் ஜனாதிபதி அலுவலகத்திற்கும் முறைப்பாடு செய்துள்ளதாக அஜித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.