முல்லைத்தீவில் உத்தேச சட்ட வரைவிற்கான ஆலோசனைகளை பெறும் கலந்துரையாடல்
உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (CTUR) உத்தேச சட்ட வரைவிற்கான ஆலோசனைகளை பெறுவதற்கான கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நேற்றையதினம்(27) காலை 8 .00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணிவரை நடைபெற்றுள்ளது.
உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் (ISTRM) மற்றும் உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான உத்தேச ஆணையம்(CTUR) இலங்கையில் வடக்கு கிழக்கில் நிலவிய மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அநீதிகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கையில் ஆணைக்குழுவொன்றை நிறுவுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றன.
மனித உரிமை மீறல்கள்
அந்தவகையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான விளக்கத்தினை வழங்கவும் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளவதற்குமான கலந்துரையாடல்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இரண்டு அமர்வுகளாக நடைபெற்றுள்ளன.
இலங்கையில் தேசிய நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமூக நீதியை மேம்படுத்தும் நோக்கில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடக்கால செயலகத்தின் ஏற்பாட்டில் குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.
1983 மற்றும் 2009ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல்களின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிய நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்படும் ஒரு சுயாதீனமான நிறுவனமாக உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் முறையாக தகவல்களைத் திரட்டல், வன்முறைகளின் போது நடந்த விடயங்களை அறிக்கையிடல், கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதிருக்க பரிந்துரை வழங்குதல் மற்றும் மோதலுக்குப் பிந்தைய இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் ஒரு பாரபட்சமற்ற அமைப்பாகப் பயன்படுத்துவது இந்த உத்தேச ஆணைக்குழுவின் நோக்கமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |