அவுஸ்திரேலியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த அகதிகளுக்கு இணைப்பு விசாக்கள்!
அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலும் குடிவரவுத் தடுப்புகளிலும் சுமார் 8 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த 4 அகதிகளுக்கு அவுஸ்திரேலியா அரசு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளது.
இதன் மூலம், இந்த 4 அகதிகளும் அவுஸ்திரேலிய சமூகத்திற்குள் தற்காலிகமாக வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், இணைப்பு விசாக்களில் உள்ள அகதிகளுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதி வழங்கப்படாது என்ற நிலைப்பாட்டில் அவுஸ்திரேலிய அரசு தொடர்ந்து உறுதியாக இருக்கின்றது.
தற்போது இணைப்பு விசாக்கள் கிடைத்த 4 பேரில் ஒருவரான ஆப்கானிய அகதி அகமது ஜஹிர் அசிசி, தான் இனி கைதி கிடையாது என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
“நான் விடுதலை ஆகிவிட்டேன். 8 ஆண்டுகளாக சிறையில் கிடந்த நான், இன்று விடுதலை ஆகிவிட்டேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்,’ என ஆப்கானிய அகதி அசிசி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வார இறுதியில், அசிசி மற்றும் இரு அகதிகள் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் மெல்பேர்ன் பார்க் ஹோட்டல் இருந்தும் ஒரு அகதி மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாமிலிருந்தும் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
“இந்த கணத்தை எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை. 9 ஆண்டுகளுக்கு பிறகு என்னை விடுவித்துள்ளனர். ஆனால் எனது நண்பர்கள் இன்னும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்,” எனக் கூறியுள்ளார்.
ஈரானிய அகதியான ஹமித் கதிமி “எனக்கு இணைப்பு விசா கிடைத்து விட்டது. ஆனால் எனது சக நண்பர்களுக்கு (அகதிகளுக்கு) விசா கிடைக்கவில்லை. நாங்கள் ஒரே குடும்பம் போல, ஒன்பது ஆண்டுகளாக ஒன்றாக வாழ்கின்றோம்.
இந்த அகதிகளின் விடுதலைக்காகவும் தொடர்ந்து போராட வேண்டும்." அகதிகள் வைக்கப்பட்டு இருக்கக்கூடிய அவுஸ்திரேலிய ஹோட்டலில் கோவிட் தொற்று பரவியதினை தொடர்ந்து ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இந்த அகதிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் 2020 முதல் 180 அகதிகளுக்கு இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டு சமூகத்திற்குள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தஞ்சக்கோரிக்கையாளர் வள மையம் குறிப்பிட்டுள்ளது.
அதே சமயம், மேலும் 85 அகதிகள் விடுவிக்கப்படாமல் இன்னும்
குடிவரவுத்தடுப்பு முகாம்களிலேயே வைக்கப்பட்டுள்ளதாக அந்த மையம் கவலை
தெரிவித்துள்ளது.