சமூக ஆலோசனைக்குழுக்கள் தொடர்பில் முரண்படும் தேர்தல்கள் ஆணையகம் மற்றும் ஜனாதிபதி செயலகம்
உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களால் முன்மொழியப்பட்ட சமூக ஆலோசனைக் குழுக்கள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ள நிலையில் ஆணைக்குழுவின் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்ள முடியாதது என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைகள் அனைத்திலும் சமூக ஆலோசனைக் குழுக்களை நியமிப்பது தொடர்பாக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க (Saman Ekanayake), மாகாண ஆளுநர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கை தொடர்பிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு இந்த ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.
வேட்புமனுக்கள்
தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (Ratnayaka) இது தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார்,
இந்த ஆலோசனைக் குழுக்களுக்கு உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர்கள் நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள், அந்தந்த அரசியல் கட்சிகளை ஊக்குவிப்பதும், தேர்தல் சட்டங்களை மீறுவதும் தவிர்க்க முடியாதது என்று அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இன்னும் செல்லுபடியாகும் நிலையில் உள்ளன.
இந்தநிலையில் குறித்த குழுக்களின் ஊடாக வேட்பாளர்களால் அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்வதை தடுக்க முடியாது என்று ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
குறித்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு உள்ளூராட்சி சபைப் பகுதிகளிலும் ஆலோசனைக் குழுக்களால் அடையாளம் காணப்பட்ட ‘அவசர அபிவிருத்தி’ நடவடிக்கைகளுக்காக 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதோடு இந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட குழுக்கள்
மேலும், உறுமய காணி விநியோகத் திட்டம், நகர்ப்புறங்களில் வீடுகள் விநியோகம், மலையக அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், விவசாய நவீனமயமாக்கல் திட்டங்கள் மற்றும் இலவச அரிசி போன்றவற்றை இந்தக்குழுக்கள் மேற்பார்வையிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் 14 பில்லியன் ரூபாய்க்கான திட்டங்கள் முடிக்கப்படவேண்டியுள்ளதால், முன்மொழியப்பட்ட குழுக்களை நிறுத்தும் திட்டம் இல்லை என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதோடு கடந்த வருடம் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்தே தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடுவதாகவும் ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனாதிபதி செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடத்தப்படவுள்ளதையும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |