தொடர்ச்சியாக இடம்பெறும் காட்டு யானை - மனித மோதல் : பல வீடுகள் சேதம்
கந்தளாய் ஜயந்திபுர கிராமத்திற்குள் நேற்று(05.11.2026) அதிகாலை சுமார் 4.30 மணியளவில் புகுந்த காட்டு யானையொன்று, பல வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
இதற்கு மேலதிகமாக, தென்னை மரங்கள், வாழை மரங்கள் மற்றும் மாமரங்கள் உள்ளிட்ட பயிர்களையும் குறித்த யானை முறித்தும் சேதப்படுத்தியும் அழித்துள்ளது.
உரிய நடவடிக்கை எடுக்க
வான் ஏல குளத்தில் பகல் நேரங்களில் தங்கியிருக்கும் காட்டு யானைகள், இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் புகுந்து இவ்வாறான சேதங்களை ஏற்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, எவ்வளவுதான் விரட்டியடிக்க முயற்சித்தாலும், இந்தக் காட்டு யானையை கிராமத்திலிருந்து விரட்ட முடியாத நிலை காணப்படுவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குளத்தின் வனப்பகுதி மற்றும் பாதுகாப்பு வலயங்களில் பல காட்டு யானைகள் தங்கியிருந்தாலும், அவற்றில் ஒரு யானை மாத்திரமே இவ்வாறு கிராமத்திற்குள் புகுந்து தொடர்ச்சியாகப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை இரண்டு முதல் மூன்று வீடுகள் வரை காட்டு யானைகளால் சேதப்படுத்தப்படுவதாகவும், இதனால் மக்கள் பெரும் அச்சத்துடனும் அசௌகரியங்களுடனும் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே, தொடர்ச்சியாகப் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் குறித்த காட்டு யானையை வேறு பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





