போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு நினைவுச்சின்னம் அமைக்க கனேடிய பிராம்ப்டன் நகர முதல்வர் உறுதி
இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிர் இழந்த தமிழர்களை நினைவுகூரும் வகையில் நினைவுச்சின்னம் ஒன்றை அமைப்பதற்கு கனேடிய பிராம்ப்டனின் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன் உறுதியளித்துள்ளார்.
சிபிசி செய்திச்சேவை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் தகர்க்கப்பட்ட நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கடந்த வாரம் யோசனை ஒன்றை பிராம்ப்டன் நகர சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது..
இதன்போது கருத்துரைத்துள்ள முதல்வர் பெற்றிக் பிரௌவ்ன், இலங்கையில் வரலாற்றை வெள்ளையடிக்க சிலர் முயற்சிக்கக்கூடும், எனினும் அதற்கு தாம் உடன்படமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலையை நினைவில் கொள்வதற்காக ஒரு நினைவுச்சின்னத்தை அமைக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த செயல் கனடாவில் உள்ள தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல. ஏனைய நாடுகளில் உள்ள தமிழர்களுக்கும் ஒரு முன்மாதிரியான செயல் ஒரு என்று பிராம்ப்டன் தமிழ் சங்கத் தலைவர் பேனாட் மரியநாயகம் தெரிவித்துள்ளார்.