நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்ததன் பின்னரே எந்தத் தேர்தலையும் நடத்துவோம்: மனுஷ நாணயக்கார
அரசமைப்பு, சட்டம் என்பவற்றை விட நாட்டு மக்களின் உயிர் வாழும் உரிமைக்கே நாம் முன்னுரிமை வழங்குவோம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்ததன் பின்னரே எந்தத் தேர்தலையும் நடத்துவோம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (10.03.2023) நடைபெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை நடத்துவது ஜனநாயகம் அல்ல
மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நெருக்கடியான நிலையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தினால் அரசியல் கட்டமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.
பொருளாதாரப் பாதிப்பு மீண்டும் தீவிரமடையும் என்பதை எதிர்த்தரப்பினர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு நாங்கள் பயப்படவில்லை.
ஆனால் தற்போது தேர்தலை நடத்துவது ஜனநாயகம் அல்ல. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதன் பின்னரே எந்தத் தேர்தலையும் நாம் நடத்துவோம்.
அரசமைப்பு, சட்டம் ஆகியவற்றை விடவும் நாட்டு மக்களின் உயிர் வாழும் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. அந்தப் பொறுப்பை அரசாங்கம் செயற்படுத்துகின்றது.
போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது
குறுகிய அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்திக் கொண்டு எதிர்த்தரப்பினர் தற்போது போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளார்கள்.
தொழிற்சங்கப் போராட்டத்தால் அரசியல் ரீதியில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.
எனவே, பொருளாதார முன்னேற்றத்துக்குத் தடையாக மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்த தவறான பொருளாதாரக் கொள்கையால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது என்பதை நாம் அன்றும் கூறினோம். இன்றும் கூறுகின்றோம், என்றும் கூறுவோம்.
மோசமான நெருக்கடி
பொருளாதாரப் பாதிப்பு தீவிரமடைந்த போது அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்தார்.
ஆனால், எந்த எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கவில்லை.
நாடு எதிர்கொண்ட மோசமான நெருக்கடியைக் கருத்தில்கொண்டு தனி நபராக இருந்து கொண்டு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக அரசாங்கத்தைப் பொறுப்பேற்றார்.
கடந்த ஆறு மாத காலத்தில் அவர் எடுத்த கடுமையான தீர்மானங்களால் நாடு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
நாட்டு மக்களும் நிம்மதியாக இருக்கின்றார்கள். எங்களின் எதிர்கால அரசியல் எவ்வாறு இருக்கும் என்பதைக் கணித்துக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசில் நாம் ஒன்றிணையவில்லை.
நாட்டு
மக்களின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து தற்போது நாம் வெற்றி பெற்றுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.