தமிழர் பகுதிகளை அபகரிக்கின்ற நிலைமைகள் எமது எதிர்காலத்தையே கேள்விக்குறிக்குள்ளாகியுள்ளது : சேயோன்
கிழக்கில் தமிழர்களின் இனப்பரம்பலை மாற்றுவதற்கு பாரிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. இவ்வாறான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த தமிழ் இளைஞர்கள் ஒன்றிணைந்து குரல்கொடுக்க முன்வரவேண்டும் என வாலிப முன்னணியின் வடக்கு, கிழக்கு மாகாண தலைவர் கி.சேயோன் தெரிவித்துள்ளார்.
வேரத்தடி என்னும் பகுதியில் நடைபெற்ற தொல்பொருள் செயலணியின் நடவடிக்கைகள் குறித்து இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு, வந்தாறுமூலை உப்போடை வீதியில் வேரத்தடி எனும் இடத்தில் தொல்பொருள் இடம் எனவும் அதற்குக் கல் நடவேண்டும் எனவும் திணைக்களத்திலிருந்து வந்தவர்கள் மக்களின் எதிர்ப்பு காரணமாகத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தமிழர் பகுதிகளை அபகரிக்கின்ற நிலைமைகள் எமது எதிர்காலத்தையே தற்பொழுது கேள்விக்குறிக்குள்ளாகியுள்ளது. அதைச்செய்வோம், இதைச்செய்வோம் என ஆட்சி பீடம் ஏறிய இந்த இனவாத அரசு தற்பொழுது சாதாரண ஆட்சியைக் கூட நடத்த முடியாமல் பலவீனமடைந்த நிலையில் தமது வங்குறோத்து அரசியலுக்காக மீண்டும் இனமுறுகலை ஏற்படுத்தி விரிசலை ஏற்படுத்தி மீண்டும் அரசியல் லாபமீட்ட முற்படுவதானது மிகவும் கேவலமான அரசியல் நிலைமையாகும்.
இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த அரசை ஒத்து ஊதுகின்ற ஊதுகுழல்கள். கிழக்கை மீட்போம் எனப் போலியாக மக்களை ஏமாற்றி வாக்கினைப் பெற்று தங்களது. பதவிகளைப் பாதுகாப்பதற்காக அமைதியாக இருக்கின்றார்கள் . இவர்களால் எந்த நன்மையும் தமிழ் மக்களுக்கு இல்லை.
இதை மக்களும் இன்று நன்கு உணர்ந்திருக்கின்றார்கள் . உண்மையில் தமிழ் மக்களையும் தமிழர் நிலத்தையும் நேசிப்பவர்களாக இருந்தால் தெற்கிலிருந்து வருகின்ற அமைச்சர்களை ஊர் ஊராக அழைத்து ஆடு வெட்டி விருந்து வைப்பதை விட்டுவிட்டு.தமிழர் நிலங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க முடியுமா எனக் கேள்வி எழுப்புகின்றேன்.
இப்பொழுது மாவட்டத்தில், ஏன் கிழக்கு வடக்கில் பாரிய இனப்பரம்பலை மாற்றுவதற்கான பாரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. அதற்கு நல்ல உதாரணம் கோரகல்லி மடுவில் வைத்து சிங்கள மக்களுக்கான காணி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளமை ஆகும்.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாகத் தமிழ் மக்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்புகளும் தொல்பொருள் செயலணியென்னும் பெயரில் சிங்கள மயமாக்கல் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான செயற்பாடுகளைத் தமிழ் இளைஞர்கள் ஜனநாயக ரீதியான எதிர்ப்புகளைத் தெரிவித்துத்
தடுத்து நிறுத்துவதற்குக் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைய வேண்டும் என அவர் கோரிக்கை
விடுத்துள்ளார்.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
