தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீது இனவெறிக் கும்பலின் கொடுந்தாக்குதல்: வலுக்கும் கண்டனம்
தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி வாகனத்தின் மீது இனவெறிக் கும்பல் கொடுந்தாக்குதல் நடத்தியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தது என தமிழர் நலப் பேரியக்கத்தலைவர் சோழன் மு. களஞ்சியம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
மேலும், பன்னாட்டு அளவில் ஐ.நா. முன்பு பெரும் கவனம் ஈர்ப்பு மாநாடு நடந்தேறுகிற இந்த நேரத்தில் இது போன்ற கொடுந்தாக்குதல்களை இலங்கையின் இனவெறிக்கும்பல் நடத்துவது கவனம் கொள்ளத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கயைில்,
இன்னும் தாயகத்தின் நிலை என்னவென்பதை தெரிய படுத்தும் நிலை இது. 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைதியான முறையில் பெரும்பான்மையினரின் இனவெறியைக் கண்டித்து 12 நாட்கள் உண்ணா விரதம் இருந்து உயிர் நீத்த திலீபனின் வரலாற்றை பறைசாற்றும் விதமாக இந்த ஊர்தி பவனி நிகழ்வு நடைபெற்றுள்ளது.
யாரும் இத்தாக்குதலை தடுக்கவில்லை
ஆனால் இந்தத்தாக்குதல் வழியாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது இன்னும் பெரும்பான்மையினரின் இனவெறி அடங்கவில்லை என்பதே.
இந்நிலையில் திருகோணமலை கப்பல்துறை பகுதியில் 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை இன்று ஊர்தி பவனி வந்துள்ளது. அங்கு இலங்கையின் தேசிய கொடியுடன் வந்த காடையர்கள் ஊர்தி பவனி மீது தாக்குதல் மேற்கொண்டு, தியாக தீபத்தின் உருவ படத்தினையும் அதில் கலந்து கொண்ட தமிழர்களையும் தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதல் இராணுவம், பொலிஸ் முன்னிலையிலேயே நடைபெற்றுள்ளது. அதன் காணொளி காட்சியை கண்ட போது நெஞ்சம் பதைக்கிறது.
சர்தாபுர பகுதியில் சிங்கள இனத்தைச் சேர்ந்த மக்கள் கற்களை நடுவீதியில் போட்டு, வீதியை வழிமறித்துள்ளனர். அந்த பகுதியில் பொலிஸ், இராணுவ புலனாய்வுத்துறையினரும் இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
யாரும் இத்தாக்குதலை தடுக்கவில்லை. முகத்தை கருப்புத்துணியால் கட்டிய இளைஞரொருவன் பெரிய கல்லினால் வாகனத்தை தாக்கும் காட்சி நம்மை நடுங்க வைக்கிறது.
கொலைவெறி தாக்குதல்
தொடர்ந்து வாகனம் முன்னேறிய நிலையில், வீதியின் குறுக்கே தடைகளை ஏற்படுத்தி காத்திருந்த, ஆண்களும், பெண்களும் நிறைந்திருந்த கூட்டம், வாகனத்தை சுற்றிவளைத்து, தடிகளால் அடித்து தாக்குவது வேதனைக்குரியது.
பெரும்பான்மை மக்களுக்குள் இருக்கும் இனவெறி என்றுமே மாறாது என்பதை இந்நிகழ்வு மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பித்து, ஊர்தியை திருப்பி அருகிலுள்ள தம்பலகாமம் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தொடர்ந்து பயணிக்க முடியாத நிலையில், அங்கேயே தங்கியுள்ளனர் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன் ஆகியோரும் கடுமையாக தாக்கப்பட்டனர்.
அவர்கள் உயிர்பிழைத்ததே பெருஞ்செயல். இலங்கை பேரினவாத அரசு பின்புலத்தில் இருந்து கொண்டு இந்த கொடுந்தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.
படிப்பினை
மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன அங்கே எப்படி இருக்கும் என்பதை சர்வதேச சமூகம் இதன் வழியாகவாவது புரிந்து கொள்ளட்டும்.
சிங்கள மக்களோடு, தமிழ்மக்கள் எந்த காலத்திலும் இணைந்து வாழவே முடியாது என்பதே இந்த கொடுஞ்செயல்கள் நமக்கு காட்டும் படிப்பினை.
இந்தத் தாக்குதல்களை ஐ.நா. கவனம் ஈர்ப்பு மாநாட்டுக் குழுவினர் கவனத்தில் எடுத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என தெரிவித்துள்ளார்.



