வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை நிறைவு
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் இன்று (15) காலை 9.00 மணிக்கு ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகக் கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.
பின்னர் முற்பகல் 11.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், நேற்று (14) வரை கட்டுப்பணம் செலுத்திய 40 பேரில் 39 பேர் இன்று வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல்
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 22 வேட்பாளர்களும், 17 சுயேச்சை வேட்பாளர்களும், மற்றொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயேச்சை வேட்பாளராக வேட்புமனுவை கையளித்ததுடன், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை கையளித்தார்.
சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் திலித் ஜயவீர, நட்சத்திர சின்னத்தின் கீழ் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை கையளித்தார்.
வேட்புமனுக்களை ஏற்றல்
அதேநேரம் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நாமல் ராஜபக்ச வேட்புமனுக்களை சமர்ப்பித்தனர். மேலும், விஜேதாச ராஜபக்ச, சரத் பொன்சேகா, ரொஷான் ரணசிங்க, ஜனக ரத்நாயக்க ஆகியோரும் வேட்புமனுக்களை சமர்பித்தனர்.
காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட பின்னர், எழுந்துள்ள ஆட்சேபனைகளை பரிசீலித்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்தல் ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது. அதன் பின்னர் சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னங்களை வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
]