வடக்கில் பேருந்து சேவைகள் மீதான முறைப்பாடுகள் - உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு
வடக்கு மாகாணத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையினால் (இ.போ.ச.) முன்னெடுக்கப்படும் சில பேருந்து சேவைகளில் நிலவும் சீரின்மை மற்றும் காலதாமதங்கள் குறித்துப் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து, அவற்றை நிவர்த்திப்பதற்கான காத்திரமான நடவடிக்கைகள் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முன்வைக்கப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு பிராந்தியப் பொது முகாமையாளருக்கு எழுத்துமூலமான கோரிக்கைகளை அதிகார சபையின் தலைவர் முன்வைத்திருந்தார்.
மக்களின் முறைப்பாடுகள்
இதனடிப்படையில், இலங்கை போக்குவரத்துச் சபையால் சம்பந்தப்பட்ட சாலை முகாமையாளர்களுக்குக் கடும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மன்னார் - தோட்டவெளி வழித்தடத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையால் முன்னெடுக்கப்படும் பேருந்து சேவைகள் சீரற்றுக் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து, குறித்த சேவையைத் தடையின்றித் தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு மன்னார் சாலை முகாமையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை சீராக நடைபெறத் தவறும் பட்சத்தில், மக்களின் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்யத் தனியார் துறையினருக்கு பிரவேசிக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவிலிருந்து ஓமந்தை நோக்கிச் செல்லும் பேருந்துகள் காலதாமதமாகச் செல்வதால், மாணவர்கள் முதலாவது பாடவேளையைத் தவறவிடும் நிலை காணப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர உத்தரவு
இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் நலன் கருதி குறித்த பேருந்து காலை 7.25 மணிக்குள் பாடசாலையை வந்தடைவதை உறுதி செய்யுமாறு சாலை முகாமையாளருக்குப் பிராந்திய முகாமையாளரால் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குப்பிளானிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பேருந்து சேவைகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் ஏழாலை மேற்கு மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சாலை முகாமையாளருக்குப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமக்கான போக்குவரத்துச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை நீக்கி, வினைத்திறனான மற்றும் முறையான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்துவதில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும்.
எனவே, போக்குவரத்துச் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் ஆலோசனைகளைத் பொதுமக்கள் எமது அதிகார சபையின் கவனத்துக்குக் கொண்டுவர முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனனியை முடித்துவிட பிளான் போட்ட குணசேகரன், ஆனால்?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் அடுத்து என்ன? படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam