ராஜவந்தான் மலைக்கு அனுமதி இல்லாமல் வந்ததாக விகாராதிபதி பொலிஸில் முறைப்பாடு (Photos)
திருகோணமலை - மூதூர் 64ஆம் கட்டை பகுதியிலுள்ள ராஜவந்தான் மலைக்கு அனுமதி இல்லாமல் வருகை தந்ததாக மூதூர் பொலிஸ் நிலையத்தில் நேற்று விகாராதிபதி முறைப்பாடு செய்துள்ளார்.
மூதூர் இந்து குருமார் சங்கத்தினால் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களைப் பழமை வாய்ந்த இடத்தை பார்வையிடுவதற்கு விகாரைக்கு அழைத்துச் சென்ற போது தமிழ் மக்களை அச்சுறுத்தியதாக மூதூர் இந்து குருமார் சங்கத்தின் தலைவர் சிவசிறி இராசதுரை பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
"எமது பழமைவாய்ந்த வரலாற்றுச் சான்று உள்ள இந்த ராஜவந்தான் மலையை மேலே சென்று பார்ப்பதற்குப் பிள்ளைகள் பெற்றோரை அங்கு அழைத்துச் சென்றோம். அமைதியாகச் சென்று கொண்டிருந்த வேளை அங்கிருக்கும் பௌத்த மதகுரு வீதிக்கு முன்வந்து மேலே செல்ல விடமாட்டேன் என்று கூறி எங்களை மறித்தார் எனவும் இந்து குருமார் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
அதன் நிமித்தம் மக்களையும் மதகுருவான என்னையும் தள்ளி தொலைபேசியை பறித்து வீசியும் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதுடன் இனரீதியான வார்த்தைகள் பேசி எங்களை அச்சுறுத்தினார் எனவும் அவர் கூறினார்.
அத்துடன் அவரின் தடையைப் பொருட்படுத்தாது மேலே சென்று பார்வையிட்டு இயற்கையான இறைவனை வழிபட்டு மீண்டும் அமைதியாக மாணிக்க விநாயகர் ஆலயத்திற்கு வந்து சேர்ந்தோம். இச்சம்பவத்தை பொலிஸாரும் புலனாய்வு பிரிவினரும் அவ்விடத்தில் நின்று பார்வையிட்டு படங்களை எடுத்தவண்ணம் நின்றனர்.
நான் அணிந்து சென்ற செருப்பைக் கூட
பௌத்த மதகுரு எடுத்துக் கொண்டு தர மறுத்துவிட்டார் எனவும் பாதிக்கப்பட்ட குரு
தெரிவித்தார்.
ஆனாலும் குறித்த விகாரைக்கு தனது அனுமதி இல்லாமல் மாணவர்களையும்
பெற்றோர்களையும் அழைத்து வந்ததாகத் தெரிவித்து மூதூர் பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்ததை அடுத்து இச்சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸ் நிலையத்தில்
இரு பக்கத்தினரையும் விசாரணை செய்வதற்காக எதிர்வரும் 2022/04/26ம் திகதி
மூதூர் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தருமாறும் அறிவிப்பு
விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.







