முன்னிலை சோசலிசக் கட்சியின் வவுனியா மாவட்டச் செயற்பாட்டாளர்களின் முறைப்பாடு
முன்னிலை சோசலிசக் கட்சியின் வவுனியா மாவட்டச் செயற்பாட்டாளர்கள், தாம் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள் மற்றும் சட்டவிரோதக் கைதுகளுக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.
இந்தநிலையில், குறித்த தரப்பினர் நேற்றையதினம்(29.12.2025) கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தமது முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த டிசம்பர் 16ஆம் திகதி வவுனியா மாமடுவ பொலிஸாரால் எவ்விதக் குற்றச்சாட்டுகளுமின்றி தன்னிச்சையாகக் கைது செய்யப்பட்ட ஜகத் கித்சிறி நவரத்னவின் விவகாரத்தை முன்வைத்து இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அக்கட்சியின் செயற்பாட்டாளர் சந்தன சிறிமல்வத்த, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்த தற்போதைய அரசாங்கம், அதற்குப் பதிலாக இன்னும் கொடூரமான புதிய சட்டங்களைக் கொண்டுவர முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

அரசியல் சுதந்திரம், பேச்சுரிமை மற்றும் ஜனநாயகப் போராட்டங்கள் மீது பொலிஸார் கட்டவிழ்த்துவிடும் இத்தகைய அச்சுறுத்தல்கள் அடிப்படை மனித உரிமை மீறல்கள் எனச் சுட்டிக்காட்டிய அவர், இச்சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், அரசியல் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், இத்தகைய அடக்குமுறைச் சட்டங்களையும் பொலிஸ் அராஜகங்களையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் முன்னிலை சோசலிசக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.