நீதிமன்றை அவமரியாதை செய்ததாக பியூமி தரப்பு சமுதித்தவிற்கு எதிராக முறைப்பாடு
நீதிமன்றறை அவமரியாதை செய்ததாக பிரபல ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவிற்கு எதிராக மாடல் அழகி பியூமி ஹன்சமாலி மற்றும் பிரபல அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க தரப்பு முறைப்பாட செய்துள்ளது.
சந்திமால் , பியூமி உள்ளிட்டவர்கள் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள காலத்தில் கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிறந்தநாள் விருந்துபசாரமொன்றை நடாத்தியமை தொடர்பில் பியூமி, சந்திமால் உள்ளிட்டவர்களை கைது செய்து காவல்துறையினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
இவ்வாறு முன்னிலைப்படுத்தியவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது. இந்த நிலையில் இந்த நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதாகவும் வறியவர்களுக்கு ஒரு சட்டமும், செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஒரு சட்டமும் அமுல்படுத்தப்படுவதாகவும் சமுதித்த குறிப்பிட்டிருந்தார்.
சமுதித்தவின் குற்றச்சாட்டு மூலம் நீதிமன்றம் தொடர்பான மக்களின் நம்பிக்கை சீர்குலையும் எனவும் அவர் நீதிமன்றின் தீர்ப்பினை அவமரியாதைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் பியூமி தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில் விசாரணை நடாத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரி இன்றைய தினம் சந்திமால், பியூமி தரப்பு சட்டத்தரணிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர்.
சமுதித்தவின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடாத்துமாறு பொதுப்பாதுகாப்பு அமைச்சருக்கும் சட்டத்தரணிகள் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் சமுதித்த பங்கேற்ற யூடியுப் நிகழ்ச்சி ஒன்றில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியுள்ளதாகவும் முகக் கவசம் அணியாது, சமூக இடைவெளி பேணாது அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் எனவும் மேலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் தனிமைப்படுத்தல் சட்டம் சமுதித்தவிற்கும் பொருத்தமானது அவருக்கு என்று தனியான சட்டங்கள் நாட்டில் கிடையாது எனவும் சந்திமால் ஜயசிங்க தொலைபேசி வழியாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.