அரச உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக பாரிய ஊழல் முறைப்பாடு
அரச உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுபான உற்பத்தி நிறுவனம் ஒன்றிடம் இருந்து இலஞ்சமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் சொகுசு மோட்டார் காரைப் பயன்படுத்துவது உள்ளிட்ட ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில், மதுவரி ஆணையாளர் நாயகத்திற்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலரான கெலும் அமரசிங்க என்பவரால் இம்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
மதுவரித் திணைக்களத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்படும் மதுபான நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 'சிபிக்யூ 2879' என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட 'ஹொண்டா வெஸல்' ரக நவீன மோட்டார் காரை, மதுவரி ஆணையாளர் நாயகத்தின் மகன் தற்போது பயன்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆணையாளரின் மகன் ஓர் பல்கலைக்கழக மாணவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காரானது ஆணையாளர் நாயகம் தனது தனிப்பட்ட பணத்திலோ அல்லது சட்டப்பூர்வ வருமான வழிகளிலோ சம்பாதித்த ஒன்றாக இருந்தால், அவர் தனது பதவியை ஏற்பதற்கு முன்னர் அரசாங்கத்திடம் சமர்ப்பித்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனத்தில் அது கட்டாயமாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு இல்லையெனில், சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளவாறு, இது இலஞ்சமாகப் பெறப்பட்டது என்பதில் நியாயமான சந்தேகம் எழுவதாக அவர் கூறியுள்ளார்.

ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான முறைப்பாடு
பொறுப்புள்ள அரசாங்க அமைச்சர்கள் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருப்பின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்று முறைப்பாடு செய்யுமாறு தெரிவித்த அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, ஒரு பொறுப்புள்ள குடிமகனாக தாம் இந்த நடவடிக்கையை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், இவ்வாறான கடுமையான ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான 10 முதல் 20 வரையிலான முறைப்பாடுகளை தொடர்புடைய விசாரணைப் பிரிவுகளுக்கு தாம் அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இக்குற்றச்சாட்டு தற்போது அரச சேவையில் உள்ள மிக உயர்மட்ட அதிகாரி ஒருவர் மீது சுமத்தப்பட்டுள்ளதால், இம்முறைப்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, எந்தவித தாமதமுமின்றி உடனடியாக விசாரணையைத் தொடங்குமாறு லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக கெலும் அமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.