வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இலங்கை அரசு விசேட சலுகை
வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான மரண இழப்பீட்டுத் தொகை ரூ. 2 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ஒரு பெரும் நிவாரணம் என வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழந்த 50 வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உறவினர்களுக்கு ரூ. 70 மில்லியன் இழப்பீடு வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இழப்பீடு தொகை அதிகரிப்பு
முன்னதாக, வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழக்கும் ஒருவருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ரூ. 6 லட்சம் வழங்கி வந்தது.
இந்த தொகை, போதுமானதாக இல்லாத காரணத்தால் குறித்த தொகையை ரூ. 2 மில்லியனாக உயர்த்த நடவடிக்கை எடுப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆண்டுதோறும் வெளிநாடு செல்லும் தொழிலாளர்களில் சுமார் 250 பேர் ஏதேனும் துரதிர்ஷ்டவசமான காரணத்தால் அந்த நாட்டிலேயே உயிரிழக்கின்றனர்.

இந்த நிலையைக் குறைக்கவும், குழுத் திட்டங்களைச் செயல்படுத்தவும் ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்குப் பணமாக அனுப்புகின்றனர். பணியகம் ஏற்கனவே அவர்களுக்காகப் பெரிய அளவிலான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.
வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கான விசேட திட்டம்
மேலும், நாங்கள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவும் பணியாற்றி வருகிறோம். இந்தத் திட்டங்களில் ஒன்று, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வங்கிகள் மூலம் 10 மில்லியன் ரூபாயை வீட்டுக் கடனாக வழங்குவதாகும்.
இந்தக் கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன என்றும், அந்த வட்டியின் ஒரு பகுதியை பணியகமும் செலுத்துகின்றது என்றும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
இது தவிர, பணியகம் தற்போது தொழிலாளர்களுக்குப் பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த கல்வி உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களையும் வழங்கி வருகின்றது என்பதையும் அமைச்சர் நினைவூட்டியுள்ளார்.