காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இழப்பீடு! அரசாங்கத்தின் அறிவிப்பு
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பற்றியும் கவனத்தில் கொண்டு இழப்பீடு உள்ளிட்ட நடவடிக்கைகளை வழங்குவதற்கு தயாராகவே உள்ளோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு குறித்து அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் பலகட்டப் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தயாராகியுள்ளது. அரசாங்கம் பேச்சுவார்த்தை விடயத்தில் அர்ப்பணிப்புடனேயே செயற்பட்டு வருகின்றது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இனங்களுக்கிடையிலான தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் நீண்டகாலமான கரிசனை கொண்டவராக இருக்கின்றார். இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு பல தசாப்தங்களாகவே இருந்து வருகின்றது.
இனப்பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தைகள்
இவ்வாறான நிலையில், தற்போது சர்வகட்சிகளின் பங்கேற்புடன், பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகளை எதிர்மறையாகப் பார்ப்பவர்களும் உள்ளார்கள்.
குறிப்பாக, ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு தேடுவதற்கான முன்னெடுக்கப்படுவதாகவும் கூறுகின்றார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் செயற்படாகவும் பிரசாரம் செய்யப்படுகின்றது.
உண்மையிலேயே சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களுக்கும் இனப்பிரச்சினை உள்ளிட்ட இதர பிரச்சினைகள் குறித்த பேச்சுக்களுக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை. நாணயஅநிதியத்துடனான பேச்சுக்கள் தொடர்பாக பிரத்தியோகமான சந்திப்புக்களும் பேச்சுக்களும் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தப் பேச்சுவார்த்தைக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுக்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை.
தமிழ், முஸ்லிம், சிங்க, மலையக தரப்புக்களில் இனப்பிரச்சினையாது தீர்க்கப்பட்டு விடாது ‘பிரச்சைக்காரன் புண்’ போல நீண்டுகொண்டிருக்க வேண்டும் என்று கருதுகின்ற தரப்பினர் இருக்கின்றார்கள். இது துரதிஷ்டவசமானது. அத்துடன், அவர்களை வெற்றிகொள்வதும் சவால்கள் நிறைந்தது.
ஆனால், அவ்விதமான விடயங்களை எல்லாம் கடந்து தான் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அதற்கு தயாராகவே உள்ளது.
குறிப்பாக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பல்வேறு கட்டப்பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதில் எவ்விதமான தயக்கத்தினையும் அரசாங்கத்தரப்பு காண்பிக்கப்போவதில்லை. மேலும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபித்தல், கைதிகளின் விடுதலை உள்ளிட்டவற்றுக்கான அடிப்படைச் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு விட்டன. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பற்றியும் கவனத்தில் கொண்டு இழப்பீடு உள்ளிட்ட நடவடிக்கைகளை வழங்குவதற்கு தயாராகவே உள்ளோம் என தெரிவித்தார்.