மன்னாரில் காணிகளை சட்டவிரோதமாக சுவீகரிக்கும் நிறுவனங்கள் தொடர்பில் கலந்துரையாடல்
மன்னாரில்(Mannar) தனியார் காணி உரிமையாளர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கும்(M. A. Sumanthiran) இடையே விசேட சந்திப்பொன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் தீவக பகுதிக்குள் தனியாருக்கு சொந்தமான காணிகளை தொடர்ச்சியாக காணி இடைத்தரகர்கள் ஊடாக சில தனியார் நிறுவனங்கள் சட்ட விரோதமாக சுவீகரிக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக கலந்தாலோசிப்பதற்காக இந்த சந்திப்பு இன்றைய தினம் (23.05.2024) இடம்பெற்றுள்ளது.
காணி சுவீகரிப்பு
குறித்த கலந்துரையாடலில் மன்னார் நடுக்குடா,கொன்னையன் குடியிருப்பு போன்ற பகுதிகளில் பாரம்பரியமாக தாங்கள் வசித்து வரும் காணிகளை தனியார் நிறுவனங்கள் தொடர்ச்சியாக அடாத்தாக வேலிகள் அடைத்து கையகப்படுத்துவதாகவும், இது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்தாலும் பொலிஸார் நடவடிக்கை எடுப்பது இல்லை என தனியார் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தனியார் காணி ஒன்றை கொள்வனவு செய்யும் சில நிறுவனங்கள் அந்த காணிகள் மாத்திரம் இன்றி அதை சூழ உள்ள காணிகளையும் சுவீகரிப்பதாகவும் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தனியார் காணி உரிமையாளர்களுக்கு சட்டத்தரணி சுமந்திரனால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், காணி சுவீகரிப்பு பிரச்சினை தொடர்பாக வழக்கு தாக்கல் செய்வதற்கு தேவையான ஆவணங்கள் தயாரிப்பது தொடர்பிலும் கலந்தாலோசிக்க பட்டுள்ளது.
மேலும், இந்த மாதம் இவ்வாறு சட்ட விரோதமாக காணி சுவீகரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனத்திற்கு எதிராக முதல் கட்டமாக மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |