பொது நினைவுத்தூபி! எப்போதும் விரும்பமாட்டோம் - கொழும்பில் தமிழர்கள் பலர் கடுமையான நிலைப்பாட்டில் (Video)
தமிழர்களுக்கான பொதுவான நினைவுத்தூபியொன்றை தென்னிலங்கையில் அமைப்பதற்கு தமிழ் மக்கள் சார்பாக தாம் எப்போதும் விரும்பமாட்டோம் என கொழும்பிலுள்ள தமிழர்கள் பலர் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
போர் காரணமாகவும் போராட்டங்களினாலும் உயிரிழந்தோரை நினைவு கூரும் வகையில் கொழும்பில் நினைவுத் தூபி அமைக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சுதந்திரத்தின் பின்னர் ஆயுத போராட்டங்கள், அரசியல் முரண்பாடுகள், சிவில் கலவரங்கள் போன்றவற்றில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் இந்த நினைவுத் தூபி நிர்மாணிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவிலியன்கள், பொலிஸார், ஆயுத படையினர் மற்றும் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட அனைவரையும் நினைவுகூரும் வகையில் இந்த நினைவுத் தூபி அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மக்களிடம் எமது செய்திப் பிரிவு கருத்து கேட்ட போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கையில் தங்களால் கொல்லப்பட்டவர்களுக்காக, ஜே.வி.பி கலவரம் நடந்த போது கொல்லப்பட்டவர்களுக்காக அல்லது தங்களது படையினருக்காக தூபியொன்றை ரணில் அரசாங்கம் நியமிக்கலாம்.
எனினும் தமிழர்களுக்கான பொதுவான நினைவுத்தூபியொன்றை அவர்கள் தென்னிலங்கையில் அமைப்பதற்கு தமிழ் மக்கள் சார்பாக நாங்கள் எப்பொழுதும் விரும்பமாட்டோம்.
பொதுவான நினைவுத்தூபியை ஒன்று யாழ்ப்பாணத்தில் அல்லது முள்ளிவாய்க்காலில் அமைக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |