இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் பொது வேட்பாளர் தெரிவின் சாத்தியப்பாடுகள்
பொது வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்துகொண்டு இம்முறை ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள முயற்சிக்கும் தமிழர்களின் இந்த முயற்சி எந்தளவுக்கு பொருத்தமானது என்ற கேள்விக்கான விடைகள் பற்றி ஆராய்தல் சிறந்ததாக இருக்கும்.
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் இந்த ஆண்டோடு முடிவடையவுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவின் பதவிக் காலத்தின் இறுதி இரு வருடங்களுக்குமான பொறுப்புச் சுமந்து செயற்படும் ஜனாதிபதியாகவே ரணில் விக்ரமசிங்க இதுவரையும் செயற்பட்டு வருகின்றார்.
தேர்தல் ஒன்றின் போது தன் கட்சிக்காக அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு கட்சியாகவே ஐதேக இருந்தது.
பெற்ற வாக்குகளுக்கேற்ப கிடைத்திருந்த ஒற்றை நாடாளுமன்ற உறுப்புரிமையைக் கொண்டிருந்த இலங்கை மங்களிடையே செல்வாக்கிழந்து படுதோல்வியடைந்த ஒரு அரசியல் கட்சியாகவும் அதன் தலைவராகவுமே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருந்தார் என்பதையும் இங்கே மீட்டல் பயன்பாடு மிக்கதாக இருக்கும்.
2/3 பெரும்பான்மை
அதிகளவான சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற அரசியல் தலைவராக கோட்டாபய ராஜபக்ச இருந்தார்.6 9 லட்சம் சிங்கள வாக்குகளால் பெரும்பான்மை வெற்றி பெற்ற நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை தன்னகத்தே கொண்ட ஒரு அரசியல் கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார்.
தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றிருக்காத கோட்டாபய ராஜபக்ச முஸ்லிம் மக்களின் பெருந்தொகை வாக்குகளையும் பெற்றிருக்க தவறியிருந்த போதும் சிங்கள மக்களின் வாக்குகளால் மட்டுமே வெற்றி பெற்றிருந்ததாக அதனை மதிப்பிட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாம் மற்றொரு விடயத்தினையும் உற்று நோக்க வேண்டும். இலங்கைத் தீவின் பெரும்பான்மை மக்கள் சிங்களவர்கள் என்பதும் சிறுபான்மை மக்களாக தமிழர்களும் அவர்களை அடுத்து தமிழ் முஸ்லிம்களும் இருக்கின்றனர் என்பதையாகும்.
சிங்கள அரசியலாளர்கள் சிங்கள மக்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைந்து அல்லது சிங்கள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து இறுதிப் பெரும்பான்மையை இலகுவாக பெற்று விட முடியும்.
ஆகவே இலங்கையின் எந்தவொரு தேர்தலிலும் சிங்களவர்கள் ஆட்சியைப் பிடிப்பதற்கு தமிழர்களினதோ அல்லது தமிழ் முஸ்லிம்களினதோ வாக்குகளுக்காக காத்திருப்பதை விட தங்கள் மக்களிடையே இறங்கி வேலை செய்தால் போதுமானது.
சிங்கள மக்களை வெல்லும் தந்திரங்களை முதுபெரும் சிங்களத் தலைமைகள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றனர்.
கோட்டாபய அமோக வெற்றி
அதனாலேயே கோட்டாபய ராஜபக்சவினால் அமோக வெற்றியை பெற முடிந்திருந்தது.இது போலொரு முயற்சியையே நல்லாட்சி அரசாங்கத்தின் போது மைத்நிரிபால சிறிசேனாவை வெல்ல வைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க சமூக வலைத்தளங்களின் உதவியுடன் சிங்கள மக்களை ஒருங்கிணைத்திருந்தார் என்பதையும் எடுத்துக் காட்டலாம்.
ஆக மொத்தத்தில் இலங்கைத்தீவின் தேர்தல் களத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் மொழிவழி ஒன்றித்து செயற்படும் ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலை தாயாரித்து அதில் குழப்பங்களின்றி பயணிக்கத் தலைப்பட வேண்டும்.
அது விடுத்து அவர்களால் அவர்கள் சார்ந்த மக்களுக்கு எத்தகைய அரசியல் நன்மைகளையும் பெற்றுக்கொடுக்க முடியாது என்பது திண்ணம்.
இலங்கைத் தீவில் நிலையான அமைதியை பெற்றுக்கொண்டு தங்களைத் தாங்களே அபிவிருத்தி செய்து கொள்ள இலங்கைத்தீவில் வாழும் எந்தவொரு சமூகமும் இதுவரை மனதார எண்ணிக் கொள்ளவில்லை.
இதில் சிங்கள மக்களானாலும் சரி அல்லது தமிழ் மொழிச் சமூகமானாலும் சரி அவர்கள் நிலையான அமைதி நோக்கி செல்வதற்கான எந்தச் செயற்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்ல விரும்பாத போக்கினையே வெளிக்காட்டி வருகின்றனர்.
பௌத்த சிங்கள தேசமாக மாற்றம்
சிங்கள சமூகத்தினர் இலங்கைத் தீவினை பௌத்த சிங்கள தேசமாக மாற்றிக்கொண்டு தாங்கள் மட்டும் தான் தங்களுக்கு மட்டும் தான் என்ற கொள்கையை வகுத்து அதனை அத்திவாரமாக வைத்துக்கொண்டு அதன் மீது எழுப்பப்படும் கட்டடமொன்று போலவே அவர்களது செயற்பாடுகள் அமைந்துள்ளன.
இலங்கையின் சுதந்திரத்தில் இருந்து அதனையே அவர்கள் செய்துகொண்டு வருகின்றனர்.இந்த முயற்சியினாலேயே இலங்கையின் சுதேச சமூகமாக வாழ்ந்துவரும் தமிழ்மொழிச் சமூகத்தினை அழித்தொழித்து அவர்களது இருப்பை கேள்விக்குள்ளாக்கி விடும்படியான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தங்கள் நோக்கத்தினை அடைவதற்காக அவர்களின் செயற்பாடுகள் எல்லை மீறியதாக அமைந்ததன் விளைவே தமிழர்கள் சிங்களவர்களை தங்கள் எதிரிகளாக பாவனை செய்து கொண்டு எதிர்ப்புக்களை வெளிப்படுத்த எத்தனித்தனர்.
தொடர்சியான மோதலும் எதிர் மோதலும் உளளாட்டு ஆயுதப் போருக்கு வித்திட்டது.அவ் ஆயுதப் போரானது இலங்கையில் மாபெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்திவிட்டு இன்று நீறுபூத்த நெருப்பாக இருக்கின்றது.
இந்த அணுகலின் விளைவுகள் இலங்கை வாழ் எந்தவொரு சமூகத்திற்கும் பாரியளவிலான வெற்றிகளை பெற்றுக் கொடுத்ததிலும் பார்க்க தீமைகளையே ஏற்படுத்தியுள்ளது. இதனை இலங்கையின் அரசியல்வாதிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது தான் இங்கே ஆச்சரியமான விடயமாகும்.
இந்த உள்நாட்டு மோதலானது ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையை உலகளவில் எடுத்தாள களமமைத்துக் கொடுத்திருக்கின்றது. தமிழர்களிடையே தேசிய ஒற்றுமை பற்றி பேச வைத்துள்ளது.
அரசியல் ரீதியிலான ஒற்றுமையோடு பிரதேச ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் தம்மிடையே ஒற்றுமை வேண்டும் என்பதை எடுத்தியம்பியுள்ளது. புலம்பெயர் தமிழ் சமூகம் உலக அரசியலோடு இலக்கு நோக்கி பயணிக்க முனைப்பும் காட்ட காரணமாகியிருக்கிறது.
இந்த வகையில் பார்த்தால் உண்மையில் இலங்கையின் உள்நாட்டுப் போரில் சிங்களவர்களை விட தமிழர்கள் தான் பெரும் நன்மைகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
எதிர் மாறாக இலங்கை அரசை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிங்களவர்கள் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை உலகளவில் எதிர்கொண்டுள்ளனர்.பொருளாதார ரீதியில் மாபெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
அடுத்துவரும் இருபது வருடங்களுக்கு இலங்கையின் சிங்கள அரசாங்கங்கள் தம்மை நிலைநிறுத்தி முன்னோக்கிச் செல்ல முடியாத பொருளாதாரத்திற்காக போராடும் இக்கட்டினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மொழியைப் பேசியவாறு முஸ்லிம் கலாச்சாரத்தினைப் பேணி வரும் ஒரு மக்கள் கூட்டமாக முஸ்லிம்கள் இருக்கினாறனர்.அவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை காலத்துக்கேற்றவாறு தமிழர்களோடும் சிங்களவர்களோடும் இசைந்து போகும் அணுகலைக் கொண்டு இயங்கி வருகின்றது.
துயர் மிகு செயற்பாடு
இந்த போக்கினை பயன்படுத்திக்கொண்ட இலங்கை சிங்கள இராணுவம் முஸ்லிம்களின் பெயர்களைப் பயன்படுத்தி கிழக்கு மாகாண தமிழர்கள் மீது படுகொலைகளையும் அடாவடி களையும் கட்டவிழ்த்து விட்டு தமிழர்களையும் முஸ்லிம்களை மோதவிட்டு இலாபமடைந்து கொண்டது.
இதன் விளைவாகவே 1990 இல் வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் 72 மணி நேரத்திற்குள் வடக்கை விட்டு வெளியேற்றப்பட்ட துயர் மிகு செயற்பாட்டுக்கு வித்திட்டது.
இன்றும் கூட இந்த துயரில் இருந்து விடுபட முடியாது முஸ்லிம் மக்கள் நடைப்பிணங்களாக வாழ்ந்து வருவதோடு சிலர் தங்களின் பலமான எதிர்ப்புக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் தமிழர்கள் மீதும் காட்டி வருகின்றனர் என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறான ஒரு சூழலில் இலங்கைத் தீவில் மொழியால் ஒன்றுபட்ட சமூகங்களாக தமிழரும் முஸ்லிம்களும் மாற்றம் பெறும் போது நிலையான அமைதி அல்லது தங்களின் சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுக்கும் இலக்கு நோக்கிய ஓட்டத்தில் பலமான அரங்கொன்று உருவாகும் என்பதில் ஐயமில்லை.
தமிழர்களிடையே உள்ள அரசியல் கட்சிகள் தமக்கிடையே ஒன்றன் மீது ஒன்று சேறு பூசும் நாகரீகத்தில் ஊறிப்போய் ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் அதனையே மிகப்பெரிய தேர்தல் பிரச்சார உத்தியாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த முறைமை முற்றிலும் தவறானது என்பதை எந்தவொரு தமிழ்த் தலைமைகளும் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை.
ஒரு தமிழ் அரசியல் கட்சியால் விடுதலைப்புலிகளின் அரசியல் அணுகலின் போது பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தொகையை எட்டிப்பிடிக்க முடியாதது இதற்கு நல்லதொரு சான்றாக அமைவதும் நோக்கத்தக்கது.
2002 இல் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பெற்ற வெற்றியை அடுத்துவரும் தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கூட பெற முடியவில்லை.
பொது வேட்பாளர் பற்றிப் பேசும் போது முதலில் தமக்கிடையே உள்ள ஒற்றுமை பற்றிச் சிந்திக்க வேண்டும்.
ஒரு சிலர் அல்லது சில அரசியல் கட்சிகள் தங்களுக்கு தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பு இருப்பதாக எண்ணிக்கொண்டு மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகவே பொது வேட்பாளர் முன்மொழிவு இருக்கும்.
தமிழர்களிடையே பிரதேசவாதம் சாதியியல் பிரச்சினைகள் என உள் முரண்பாடுகள் நிலவி வரும் சூழலில் அதனால் பாதிக்கப்பட்ட அதிகமானோர் இருக்கின்ற நிலையில் அவற்றுக்கான தீர்வுகளைக் காண்டு அவற்றினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து விடுபடுவதற்கான முயற்சிகளை அவர்கள் இன்னமும் எடுத்துக்கொள்ள முனையவில்லை.
எல்லா முனைப்புக்களையும் பேச்சளவில் கொண்டிருக்கும் அவர்களால் செயல்வடிமொன்றை உருவாக்கி இந்த முரண்பாடுகளை களைந்து கொண்டு தமிழர்கள் என்ற ஒன்றிணைவோடு செயற்பட முடியவில்லை என்பதை நடைமுறைச் செயற்பாட்டுகளூடாக அறிந்துகொள்ள முடியும்.
அதே வேளையில் பல தமிழ் அரசியல் காட்சிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒருமைப்பாடு சிதைந்து போயுள்ள இன்றைய நிலையில் அந்த கட்சியின் உள்ளக நிர்வாக செயற்பாடுகளில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள நீதிமன்றங்களை நாடி வழக்குகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
ஒன்றிணைந்த கட்சி
ஒன்றிணைந்த கட்சிச் செயற்பாட்டை திருப்திகரமாக தமக்கிடையே ஏகோபித்த முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில் தமிழத்தேசிய கூட்டமைப்பு இருக்கின்றது.
யாப்பு நடைமுறை இருந்தும் கட்சியின் செயற்பாடுகளுக்கு அதன் மத்தியகுழு உறுப்பினர்களே தடங்கல்களை ஏற்படுத்த முனையும் போது அதனை சீர்செய்து கொள்ள முடியாத நிலையில் தான் அதன் நிர்வாக கட்டமைப்பு உள்ளது.
அதாவது சிறந்த தலைமைத்துவமற்ற கூட்டிணைவுக்கட்சியாக இருக்கின்றது எனபது வெளிப்படை.தமிழ் மக்களிடையே பெரியளவில் செல்வாக்குமிக்க அரசியல் கட்சியாக இருந்து வந்தது தமிழத்தேசிய கூட்டமைப்பு மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
வடக்கில் தான் தமிழ்க் கட்சிகள் இருக்கின்றன என்ற நிலை இல்லை.கிழக்கிலும் மலையகத்திலும் தமிழ்க் கட்சிகள் உள்ளன.
பொது வேட்பாளர் என்ற தேர்வின் மூலம் இலங்கை முழுவதும் உள்ள தமிழ் மக்களின் வாக்குகளை அந்த பொது வேட்பாளரை நோக்கி குவிக்கும் போது தான் அந்த முயற்சி பெருவெற்றி பெற்றதாக அமையும்.
அப்படியென்றால் இலங்கை முழுவதும் உள்ள தமிழ்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும்.அதனை யார் செய்யப் போகின்றனர்.அல்லது எந்த கட்சி செய்யப் போகின்றது?
அந்த ஒன்றிணைவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோற்றத்தினைப் போல் இருக்குமா?அதாவது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது பெறப்பட்ட ஒன்றிணைந்த பலம் போல் பொது வேட்பாளருக்கான ஒன்றிணைவின் மூலம் கிடைக்கும் பலம் இருக்க வேண்டும்.தமிழ் மக்களின் வாக்குகளை சிறிதளவேனும் சிதறடிக்கும் சூழல் உருவாகக் கூடாது.
இதனிடையே இலங்கையில் உள்ள முஸ்லிம் கட்சிகளையும் ஒன்றிணைத்து பயணிக்க முடியுமா? அதற்கான சாத்தியப்பாடுகள் என்ன? என்ற கேள்விக்கான விடைகளையும் ஆராய வேண்டும்.
ஏனெனில் இலங்கையில் தனி நாட்டுக்கான ஒரு சூழல் உருவானால் தமிழ் பேசும் முஸ்லிம்களின் பாத்திரம் என்ன என்ற கேள்வி சார்ந்தும் பொது வேட்பாளர் தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
இலங்கை அரசியலில் பொது வேட்பாளர் என்ற தெரிவு ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டது.
நடந்தேயாக வேண்டிய ஒரு சனநாயகக் தேர்தலாக இருந்த போதும் இறுதி நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலை நடத்திக்கொண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்தாது விடலாம்.
ஜனாதிபதித் தேர்தல்
அதற்காக நாட்டின் பொருளாதார நிலைமையை காரணம் காட்டி நாடாளுமன்றத்திற்கூடாக புதிய ஜனாதிபதியாக மீண்டும் ரணில் விக்ரமசிங்கவே தெரிவு செய்யப்படுவதற்கான முறைமை ஒன்றை உருவாக்க முயற்சிக்கலாம்.
பொறுப்பு வாய்ந்த செயற்பாடாக அப்படியான ஒன்றே இருக்க முடியும்.ஏனெனில் பொருளாதார நெருக்கடிக்குள் நாடு சென்று பொது மக்கள் கடுமையான இக்கட்டான நிலையில் இருந்த போது அந்த சூழலை எதிர்கொண்டு மாற்றியமைக்க அன்றைய சூழலில் இலங்கையில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பிருந்ததுஎல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் முன்மொழிவுகளை முன் வைக்கும் ஒரு வாய்ப்பும் இருந்தது.
அத்தகைய சூழலில் இருந்த இரு தெரிவுகளில் ஒன்று ஜனாதிபதித் தேர்தலை உடன் நடத்துவது.மற்றையது கோட்டாபய ராஜபக்சவின் மீதமிருக்கும் ஆட்சிக்காலத்தினை புதிய ஒருவர் மூலம் நிரப்புதல்.
நாட்டின் அன்றைய இக்கட்டான சூழலில் சனாதிபத் தேர்தலை நடத்துவதற்கான பொருளாதார வளம் இருக்கவில்லை.
அதே நேரம் வெளிநாடொன்று உதவும் சூழலும் இல்லை.வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்தாத ஒரு சூழலில் அதனை மீளச்செலுத்தலை தம்மால் முடியாது என இரண்டாண்டுகளுக்கு மீளச்செலுத்தலை நிறுத்திக் கொண்டது இலங்கை அரசாங்கம்.
இத்தகைய ஒரு சூழலில் தேர்தல் நடத்துவதற்கு நிதியுதவியினைச் செய்து கொடுக்க ஒரு வெளிநாடு முன்வரும் என்றால் அதற்கான புத்திசாலித்தனமான சாத்தியப்பாடுகள் இல்லை.
ஆகவே இரண்டாவது தெரிவான புதிதாக ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தல் மட்டுமே பொருத்தப்பாடானது.அதற்கான அதிகாரம் மொட்டு கட்சியிடமே அன்று இருந்தது.
அவர்களும் நாட்டின் யதார்த்த அரசியலை புரிந்து கொண்டு ஜனாதிபதியாக ஒருவரை நாட்டின் அரசாங்கத்தினை பொறுப்பேற்க கேட்டிருந்தனர்.அவர்களின் அன்றைய உடனடி நிபந்தனையாக இருந்தவற்றை பின்வருமாறு சுட்டிக் காட்டலாம்.
01) நாட்டின் இக்கட்டான சூழலை மேலும் மோசமடைந்து செல்வதைத் தடுத்தல்.
02) பொருளாதாரத்தினை மீட்டெடுத்தல்
03) கடனை மீளச் செலுத்தும் பொறிமுறைமையை உருவாக்கல்
04) மீளவும் சர்வதேச உதவிகளை பெறுதல் என்று இருந்தது.
யார் ஒராவரால் இவற்றை செய்து கொள்ள முடியுமோ அவரே அன்று இலங்கையின் ஜனாதிபதியாக தேர்வாகும் வாய்ப்பு திறந்து விடப்பட்டது.
இந்த சூழலில் சிங்களக் கட்சிகள் சார்ந்தோ அன்றி சிங்கள புத்தியீவிகள் சார்ந்தோ ஒருவரை ஜனாதிபதியாக்கிக் கொள்ள முடியும்.
ஆயினும் அந்த சவாலை இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே ஏற்றிருந்தார். மேற்சொன்ன சவால்களையும் அவர் இதுவரை நேர்த்தியாகவே முன்னெடுத்து வருகின்றார்.
இந்தச் சூழலில் தமிழர்கள் தங்களுக்கிருந்த மிகப்பெரிய வாய்ப்பினை கை நழுவ விட்டு விட்டனர் என்றே சொல்ல வேண்டும்.அன்று அவர்களது அரசியல் பேசும் அணுகுமுறை யதார்த்த சூழலை புரிந்து கொள்ள முடியாத; ஒருவகையில் கொள்ளையடிக்கும் பாணியில் இருந்தது எனலாம்.
நாட்டின் கடன் சுமை
இக்கட்டான சூழலில் நாடு இருக்கும் போது வடக்கு கிழக்கை தங்களிடம் தந்தால் நாட்டின் கடன் சுமையை தாங்கள் தீர்ப்பதாக அன்று புலம்பெயர் தமிழர்கள் முன்மொழிவொன்றை முன் வைத்திருந்தனர்.
இதே நிலையை தமிழர்கள் தாங்கள் நாடாக இருக்கும் போது எதிர் கொண்டிருந்தால் அப்போது புலம்பெயர்ந்து வாழும் சிங்களச் சமூகம் இது போல் ஒரு நிபந்தனையை முன் வைத்திருந்தால் தமிழர்களின் முடிவு எதுவாக இருக்குமோ அதுவாகவே அன்று சிங்கள மக்களின் முடிவும் இருந்தது என்பதை இன்றாவது தமிழ் அரசியல் பரப்பில் இயங்கி வரும் தலைவர்களும் ஆய்வாளர்களும் சிந்தனையாளர்களும் கருத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும்.
இன்று ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தி தமிழ் மக்களின் ஏகோபித்த தேர்வை நிரூபித்து பேரம் பேசும் சக்தியை உருவாக்கி அரசியல் சுயநிர்ணய உரிமையை வென்றெடுத்து சமஸ்டி அல்லது மாகாண முறைமை அல்லது தமிழர்களுக்கான குடியுருமை உரித்துக்களை முழுமையாக பெற்று வாழும் யாதேனும் ஒரு முறைமையில் தீர்வுகளை பெறுவதற்கு முயற்சிப்பதே ஆகும்.
பொருளாதார நெருக்கடியில் இலங்கையின் அன்றைய சவாலை இன்றைய ரணில் விக்ரமசிங்க போல் ஒரு தமிழர் எதிர்கொள்ள முன் வந்திருந்தால் இன்றளவும் அவர் இலங்கையின் ஜனாதிபதியாகவே இருந்திருப்பார்.
அன்று ரணில் விக்ரமசிங்க கூட தேர்தல் இல்லாமல் புதிய ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்கும் சூழல் உருவாக்கப்பட்டதும் விழுந்தடித்து வந்து பதவியேற்கவில்லை என்பதையும் நோக்க வேண்டும்.
பொருளாதார சவாலை எதிர்கொண்டு நாட்டினை இயல்புக்கு கொண்டு வந்து விட்டு அதன் பின்னர் நிலையான அமைதிக்காக இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும். அல்லது மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை நாடு சந்திக்கும் என்ற யதார்த்த உண்மையை உதவிகளை வழங்கும் சர்வதேச நாடுகளிடையேயும் சிங்கள பெரும்பான்மை சமூகத்திடையேயும் முன்வைத்து விளக்கிக் கொள்வதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வொன்றை பெற்றுக் கொண்டிருக்க முயன்றிருக்கலாம்.
இன்றைய பொதுவேட்பாளர் தேர்வை விட அது அதிக நன்மைகளைத் தந்திருக்கும் என்பது திண்ணம்.
இலங்கையின் ஜனாதிபதியாக ஒரு தமிழர் இருக்க முடியுமா? என்ற கேள்விக்கான பதில் ஆம் என்பதே.
பொது வேட்பாளர்
ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழர் போட்டியிட முடியும் என்றால் அவர் வெற்றி பெற்றால் எப்படி அவரை நீக்கிக் கொள்ள முடியும். ஆதலால் தமிழரோ அன்றி முஸ்லிம் ஒருவரோ இலங்கையின் ஜனாதிபதியாக வர முடியும் என்பதை நடைமுறை அரசியல் நமக்கு எடுத்தியம்புகின்றது.
இங்கே உள்ள சிக்கல் என்னவென்றால் தமிழரோ அன்றி முஸ்லிம் ஒருவரோ ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல முடியாமை, மற்றும் வென்றால் தொடர்ந்து நீடிக்க முடியாமை என்பவற்றுக்கான காரணங்களாக இலங்கையின் அரசியல் யாப்பின் வழியே அதன் கொள்கைகளை பேணி நடந்து கொள்ளுவார்கள் என்ற நம்பிக்கை சிங்கள மக்களிடம் இல்லாதது ஆகும்.
நீண்ட காலம் அடிமைகளாக இருந்த கறுப்பின அமெரிக்கர்களில் இருந்து அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஒருவர் வர முடிவதும் சிங்கப்பூரின் நீண்ட காலமாக உப சனாதிபதாயாக ஒரு தமிழர் இருக்க முடியும் என்றால் அவையெல்லாம் எப்படிச் சாத்தியமாகின என இலங்கையின் சிறுபான்மை இனங்கள் நீண்ட காலமாகவே சிந்திக்கத் தலைப்படாததும் பிரச்சினைகள் முற்றுப் பெறாமல் தொடர்வதற்கு ஒரு காரணமாக இருக்கின்றன என்பதும் இங்கே நோக்கத்தக்கது.
உருப்படியான மாற்றங்களை நோக்கி நகரும் மறுபடியும் ஒரு முயற்சியாகவே பொது வேட்பாளர் தெரிவு இருக்கின்றது.இது தொடர்பான தெளிவான சிந்தனையை மக்களிடையே ஏற்படுத்தாத வரை இந்த முயற்சியும் தமிழர்களுக்கு தோல்வி நோக்கியதாகவே அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |