சிறைச்சாலை சட்டவிதிகளைத் திருத்துவதற்கான உபகுழு கலந்துரையாடல்
சிறைச்சாலைகளின் சட்டவிதிகளில் மாற்றங்கள் மற்றும் திருத்தங்களை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நியமித்துள்ள உபகுழுவின் முதலாவது கலந்துரையாடல் இன்று நடைபெற்றுள்ளது.
நீதியமைச்சர் ஹர்சண நாணயக்கார தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் உபகுழுவின் ஏனைய உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தேவையான வழிகாட்டல்
குறித்த குழுவின் செயற்பாடுகள் குறித்து தேவையான வழிகாட்டல்களை இதன்போது நீதியமைச்சர் ஹர்சண நாணயக்கார வழங்கியுள்ளார்.

பௌத்த மதத்தின் மூன்று பீடங்களைச் சேர்ந்த மகாசங்கத்தினருடன் கடந்த எட்டாம் திகதி ஜனாதிபதி மேற்கொண்ட கலந்துரையாடலுக்கு அமைவாக இந்த உபகுழு நியமிக்கப்பட்டிருந்தது.
இக்குழுவில் பௌத்த விவகாரங்கள், சமய மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் மேலதிக செயலாளர். பொது நிர்வாக அமைச்சின் மேலதிக செயலாளர், பௌத்த விவகாரங்கள் ஆணையாளர் நாயகம், சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.
பௌத்த துறவிகளுக்கான விதிகள்
1877ஆம் ஆண்டின் பழமையான சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தில் (Prisons Ordinance) பௌத்த துறவிகளுக்கான பிரத்யேக விதிகள் மிகக் குறைவாகவே உள்ளன. எனவே இக்குழுவிற்கு 2 வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு, பின்வரும் சீர்திருத்தங்களை மேற்கொள்ளப் பரிந்துரைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பௌத்த துறவிகள் சிறைக்காவலில் இருக்கும்போதும், குறிப்பாக அவர்களைச் சிறை வளாகத்திற்கு வெளியே (நீதிமன்றம்/மருத்துவமனை) அழைத்துச் செல்லும்போதும் பின்பற்ற வேண்டிய புதிய விதிமுறைகளை உருவாக்குதல்.
தண்டனை பெற்ற துறவிகள் பொதுவெளியில் காவி ஆடை அணிந்து செல்வதா அல்லது அதற்கான மாற்றுப் கண்ணியமான உடைகள் வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்த நடைமுறைச் சாத்தியங்களை ஆராய்தல்.
துறவிகள் தொடர்பான எந்தவொரு இறுதிச் சட்டத் திருத்தமும் மகாசங்கத்தினரின் ஆலோசனையுடனும் பௌத்த மத விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையிலுமே சட்டமாக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.