தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சினால் விசேட ஆலோசனைக் குழுக் கூட்டம்
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று (07.08.2024) நாடாளுமன்ற குழு கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.
குறிப்பாக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது அம்பாந்தோட்டை மாவட்டத்தின் கட்டுவன பிரதேச செயலகத்திற்குட்பட்ட ரிதிகஹாய, சியராபிட்டிய, வெலிபிட்டிய, மித்தெனிய ஆகிய பகுதிகளுக்கு காகிரியோபடை நீர் திட்டத்தின் மூலம் நீரைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீரவால் பிரேரணை கொண்டு வரப்பட்டது.
கழிவு நீர் முகாமைத்துவம்
மேலும் உத்தேச தலகம சௌபாக்ய குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அம்பேபுஸ்ஸ, தலகம சௌபாக்ய சமூக அடிப்படையிலான அமைப்பு விடுத்த கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
பத்தேகம பிரதேச செயலகப் பிரிவின் பலகொட சந்தியிலிருந்து ஆரம்ப சந்தி வரை இயங்கும் குடிநீர்த் திட்டத்தின் கீழ் குருந்துஹேன 08ஆம் கட்டை, அதுரத்வில, குருந்துஹேன பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு குடிநீர் வழங்குமாறு மேற்கொண்டுவந்த கோரிக்கை தொடர்பிலும் கரிசனை காட்டப்பட்டது.
தற்போது செயலிழந்துள்ள "காலி கழிவு நீர் முகாமைத்துவத் திட்டத்தை" நடைமுறைப்படுத்துவதில் உள்ள தற்போதைய நிலைமை, எதிர்கால முன்னேற்றம், தடைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் குருநாகல் நகரத்தை அண்மித்த பிரதேசத்தில் நிர்மாணிக்கவிருக்கும் இந்திய வீடமைப்பு திட்டம் தொடர்பாகவும் இக்குழு கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மக்களின் பாவனைக்கு கையளிப்பது
அத்தோடு மன்னார், மாந்தை பெரியமடு ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்று வரும் நீர் வழங்கல் திட்டத்தின் தாமதம் பற்றியும் வினா எழுப்பப்பட்டது.
இதன்போது இத்திட்டம் வெகுவிரைவில் பூர்த்தி செய்து மக்களின் பாவனைக்கு கையளிப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், அமைச்சர் மகிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி ராமேஸ்வரன், ரவூப் ஹக்கீம், மாயாதுன்னா சிந்தக அமல், சிரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சந்திம வீரகொடி, மஞ்சுலா திசாநாயக்க அமைச்சின் செயலாளர், நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகள் உட்பட மேலும் பல உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |