முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு (VIDEO)
தமிழர் விடுதலை போராட்டத்தில் வித்தாகிப்போன முதலாவது பெண் மாவீரர் மாலதியின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி, தர்மபுரத்தில் ஒழுங்கமைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் நடைபெற்ற மாலதியின் 35 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தர்மபுர வட்டாரத்தின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் கலைவாணி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் த.குருகுலராஜா, பிரதேசசபை உறுப்பினர்கள் த.ஜீவராசா மற்றும் ஜெயசித்திரா வட்டார அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் தமிழ் தேசியப்பற்றாளர்கள் மற்றும் எம்மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம்
யாழில் தமிழீழ விடுதலை போராட்டத்தில் வீரச்சாவடைந்த முதல் பெண் போராளி 2ம் லெப்டினன்ட் மாலதியின் நினைவேந்தலை வேலன் சுவாமிகள் அனுஷ்டித்துள்ளார்.
1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி கோப்பாய் கிறேசர் வீதியில் இந்திய இராணுவத்துடனான மோதலில் அவர் வீரச்சாவடைந்தார்.
இன்று மாலை 6 மணிக்கு மாலதி வீரச்சாவடைந்த இடத்தில் மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.



