தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
யாழில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று (14.12.2022) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தீபமேற்றப்பட்டு அன்ரன் பாலசிங்கத்தின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நினைவேந்தல் அனுஷ்டிப்பு
இந்நிலையில் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் கலைவாணி தலைமையில் கிளிநொச்சி மாவட்ட காரியாலயமான அறிவகத்திலும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துகொண்டு உரையாற்றுகையில்,
இலங்கை அரசாங்கம், பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்ற இந்தத் தருணத்தில், பேரம் பேசக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருந்தும், எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் தமிழ்த் தலைமைகள் பேச்சுக்குச் சென்றமை இனத்துக்கும் தியாகங்களுக்கும் செய்த பச்சைத்துரோகம்.
பேச்சுக்குப் போவதற்கு முன்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு போலி நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு சமஷ்டியைத்தான் கேட்கப்போகின்றோம், அதை ஏற்காவிட்டால் வெளியேறுவோம் என்று விம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டு, பேச்சில் சமஷ்டி தொடர்பில் அவர்கள் வாயே திறக்கவில்லை.
அரசாங்கம், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அழைப்பு விடுத்திருக்கின்ற இந்த நேரத்திலே விடுதலைப்புலிகள் இயக்கம் யுத்தம் மௌனிக்கப்படாமல் ஓர் இயங்கு நிலையில் இருந்திருந்தால் எங்களுடைய தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கமும், தமிழ்ச்செல்வம் அண்ணனும் அந்த முழுப்பொறுப்பையும் ஏற்று ஒட்டுமொத்த தேசத்துக்காக இந்த நிலைமைகளைக் கையாண்டு இருப்பார்கள் என தெரிவித்துள்ளனர்.
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்
இந்நிலையில் குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு கருத்துரைக்கையில்,
பரந்து வாழும் உலகத்தில் தமிழ்மக்கள் பெருமை கொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் முடிவில்லா சாதனை புரிந்து தமிழ்மக்களின் சுதந்திரபோராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்தியவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஆவார்.
தாயகத்தில் போர் உக்கிரம்பெற்ற காலகட்டப்பகுதிகளில் தாயத்தில் இருந்து கொண்டு அரசியல் செயற்பாடுகளை நகர்த்த முடியாத சூழலிலும் உடல்நலத்தினை கருத்தில் கொள்ளாது பன்னாட்டிற்கு சென்று தமிழ்மக்களின் அரசியல் செயற்பாடுகளை எடுத்துகூறியவரே தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ஆவார் என தெரிவித்துள்ளார்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விநோனோகரதாலிங்கம் கலந்துகொண்டு கருத்துரைக்கையில்,
வெளிநாடுகளுக்கு கண்துடைப்பாக இப்பொழுது இருக்கின்ற பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடிகளை தீர்க்கவேண்டுமாக இருந்தால் ரணில்விக்கிரமசிங்கவிற்கு இருக்கின்ற ஒரோ ஆயுதம் பேச்சுவார்த்தை இந்த மாயைக்குள் தமிழர்தரப்பினை கொண்டுபோய் சேர்க்கவேண்டும்.
எங்களுக்குள் ஒற்றுமை இல்லாத நிலையினை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது.
இன்றைய காலத்தில் மக்கள் மீது சந்தேகம் ஏற்படுகின்ற அளவிற்கு
தமிழ்தேசியக்கூட்டமைப்பின் செயற்பாடு இருக்கின்றது என்பதை நாங்கள்
ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய
மக்கள் முன்னணியின் அமைப்பாளர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்,
ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: யது, ராகேஷ், கஜிந்தன்