ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் 22 வது நினைவேந்தல் (Photos)
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் 22 வது நினைவேந்தல் இன்றாகும்.
வவுனியா
ஊடகவியலாளர் ம.நிமலராஜனின் 22 ஆவது நினைவு தினம் இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது.
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் தொடர் போராட்டம் மேற்கொள்ளப்படும் வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார்,
“தமிழ் பத்திரிகையாளர் நிமலராஜனின் 22 வது ஆண்டு படுகொலை நினைவு நாள் இன்று. நிமலராஜன் படுகொலை தமிழ் ஜனநாயகத்தை கொன்றது.
தமிழரின் ஜனநாயகம் தமிழ்தேசியத்தை உயிர் மூச்சாக கொண்டது. இலங்கை ஜனநாயகம் என்பது சிங்களவரின் ஜனநாயகம், அது தமிழர்களை ஒடுக்குவதற்கு மாத்திரமே.
தமிழர்களின் ஜனநாயகம் என்பது, பாதுகாப்பான, பாதுகாக்கப்பட்ட தமிழர் தாயகம் வரும் போது தான் தமிழர் ஜனநாயகத்துக்கு உயிர் வரும்.
நிமலராஜன் உயிருடன் இருந்திருந்தால், தமிழ் அரசியல் வாதிகளின் முடிச்சுக்களை தனது பலம் வாய்ந்த எழுத்துக்களால் அவிழ்த்து அம்பலப்படுத்தியிருப்பார்.
இந்தியா 1987ல் இருந்து 13வது திருத்தம் பற்றி பேசி வருகிறது. ஆனால் 13வது
திருத்தத்தை நடைமுறைப்படுத்த எதுவும் நடக்கவில்லை. ஆனால் இந்தியா இன்னமும் 13வது
திருத்தத்தை பொய்யாக வலியுறுத்தி வருகிறது.
இந்தியர்கள் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தினால், 13வது திருத்தம் சிறந்தது என்று நினைத்தால், இந்தியாவின் தற்போதைய அரசியல் அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்குப் பதிலாக இந்திய மாநிலங்களில் 13வது திருத்தத்தை இந்தியா நடைமுறைப்படுத்த வேண்டும்.
13வது சட்டத்திருத்தம் இந்தியாவில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை எங்களுக்குக் காட்டுங்கள், அது பல இனங்கள் மற்றும் பல மொழிகளுடன் உள்ள நாட்டில் செயல்பட்டால், இந்தியாவில் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஈழ தமிழர்கள் கற்றுக்கொள்ள சில பாடங்களை அறிய முடியும்.
இரட்டை முகத்தார் ஸ்ரீதரன் எம்.பி இந்தியாவில் இருக்கிறார். இந்திய தமிழ் தலைமைகள் ஸ்ரீதரனை நம்பக்கூடாது. கடந்த கோடையில் ஸ்ரீதரன் அமெரிக்காவில் இருந்தபோது, வெவ்வேறு பார்வையாளர்களுடன் வெவ்வேறு கொள்கைகளை சொல்லியிருந்தார்.
அவரது இந்தியப் பயணம் நமது அரசியல் பயணத்தை பாதிக்கலாம்.
தமிழகத்தில், மறைந்த ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட கொள்கையான வடக்கு கிழக்கு
தமிழர்களுக்கான பொது வாக்கெடுப்பை முறியடித்து இந்தியாவிடம் புகழ் தேட
முயலும் ஸ்ரீதரன் எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2065வது நாளில் ஐ.நா.வின் மேற்பார்வையில்
பொது வாக்கெடுப்பின் கீழ் ஒன்றுபடுமாறு தமிழ் அரசியல்வாதிகளை அழைத்தோம்.
சர்வஜன வாக்கெடுப்பு பற்றி தமிழ் தலைவர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? ஜனநாயகத்தில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற இது ஒரு கருவி.
கடந்த UNHRC தீர்மானத்தில் கூட வாக்கெடுப்பு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது மற்றும் UNHRC சர்வஜன வாக்கெடுப்பு பற்றி இதுவே முதல் முறை கூறியுள்ளது.
தமிழ் தலைமைகள் இந்தியாவையோ அல்லது இலங்கையையோ காயப்படுத்த விரும்பவில்லை. இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்பதில்லை.
தமிழ் அரசியல் தலைமைகள், சம்பந்தன், பொன்னம்பலம், விக்னேஸ்வரன் அவர்கள் இந்தியாவிற்கும் ஸ்ரீலங்காவிற்கும் இடையில் நடனமாடுகிறார்கள். இந்த நாடுகளின் உணர்வுகளைப் பாதிக்கும் எதையும் சொல்லவோ செய்யவோ மாட்டார்கள்.
எனவே, தற்போதைய தலைமை தமிழர்களுக்கானது அல்ல, அவர்கள் அரசியல்வாதிகளாக பல
காலங்களுக்கு வாழவே விரும்புகின்றனர்.
நமது அரசியல் சுதந்திரத்தைப் பெறுவதற்கோ அல்லது நமது அரசியல் சுதந்திரத்தைப்
பெற்று தருவதற்க்கோ எந்த வழிமுறையையும் அவர்கள் இது வரை வழங்கவில்லை.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பயப்படும் இந்த தமிழ் அரசியல்வாதிகளை நாம் எப்படி நம்புவது, அவர்கள் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தை அழைக்காமல் தடுக்கிறார்கள். புதிய தலைமுறை தமிழ் அரசியல்வாதிகள் எமக்கு தேவை” என்றார்.
செய்தி:ஷான் , ராகேஷ்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் 22 வது நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இந் நினைவேந்தல் இன்று புதன்கிழமை (19.10.2022) அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது, ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு அன்னாரின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் பா.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நினைவேந்தலில் ஊடகவியலாளர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன். மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் ரி.சரவணபவான்,மட்டக்களப்பு சர்வமத நல்லிணக்கத்தின் செயலாளர் வணபிதா ஜேசுதாஸ்., மற்றும் மனித நேய அமைப்புக்ளைச் சோந்தவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், படுகொலை செய்யப்பட்ட ம.நிமலராஜன் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்.
செய்தி :பவன்
வவுனியா
வவுனியா ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்களின் 22 வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (19.10.202) 22 வருடங்கள் ஆகின்றன.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனை நினைவுகூரும் நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தில் அமைய தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் தலைமையில் நடைபெற்றது.
ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியதுடன் முதலாவது ஈகை சுடரினை சிரேஷ்ட ஊடகவியராளர் நவரத்தினம் கபில்நாத் அவர்கள் ஏற்றிவைத்திருந்ததுடன் நினைவுரையினையும் வழங்கியிருந்தார்.
தொடர்ந்து நிமலராஜனின் உருவப்படத்திற்கு ஊடகவியலாளர்கள் நினைவுச்சுடரை ஏற்றியதுடன் மலரஞ்சலி செலுத்தினர்.
செய்தி :திலிபன்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 22ம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் , ஊடக அமையத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதன் போது மலர்மாலையை மூத்த ஊடகவியலாளர்களான கு. செல்வக்குமார் மற்றும் த. வினோஜித் ஆகியோர் திருவுரு படத்திற்கு அணிவித்தனர்.
அதனை தொடர்ந்து, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன் சுடரேற்றியதை தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
செய்தி : தீபன்
முல்லைத்தீவு
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் 22 ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (19.10.2022) இடம்பெற்றது.
இதில் முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் நிமலராஜனின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி உணர்வுப்பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
2000 அக்டோபர் 19 அன்று, இவர் இலங்கை இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இராணுவ ஆதரவோடு இயங்கும் ஒட்டுக்குழு ஆயுததாரி ஒருவரால் சுட்டுக்கொலைச் செய்யப்பட்டார்.
நிமல்ராஜன் படுகொலை செய்யப்பட்டு 22 வருடங்கள் கடக்கின்ற போதிலும் இவரின் படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்தி:கே .குமணன்