முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை நினைவு கூறும் நிகழ்வு காரைதீவிலும் முன்னெடுப்பு
முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலம் அரங்கேறி 17 வருடங்கள் கடந்த நிலையிலும் நாங்கள் சர்வதேசத்திடம் வேண்டி நிற்பது என்னவென்றால், தமிழர்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும், எங்களுக்கான உரிமை கிடைக்க வேண்டும் என்பதாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடரை ஏற்றிவைத்த பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழின அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று முன்தினம்(15.05.2026) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சு.பாஸ்கரனின் ஏற்பாட்டில் பிரதேச சபைக்கு முன்பாக உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை
கோடீஸ்வரன் எம்.பி. மேலும் உரையாற்றுகையில்,
"முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நடந்து 17ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், எங்களது மனதிலிருந்து இந்த கவலைகள் வடுக்கள் மாறப்போவதில்லை.

தமிழினப் படுகொலையானது திட்டமிடப்பட்ட வகையிலே இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளின் பக்கத்துணையாகவும் நின்று செயற்படுத்தப்பட்டதை நாங்கள் என்றும் மறக்கப்போவதில்லை.
எந்த நோக்கத்திற்காக இந்த மக்கள் முள்ளிவாய்க்காலிலே உயிர் நீத்தார்களோ, அந்த நோக்கத்தை அடைகின்றவர்களாக, அந்த நோக்கத்தைப் பெறுகின்றவர்களாக நாங்கள் போராட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

லட்சக்கணக்கான மக்கள் இந்த மண்ணிலே வித்தாகி இருக்கின்றார்கள். லட்சக்கணக்கான போராளிகள் இந்த மண்ணிலே உயிர் நீத்திருக்கின்றார்கள். அவர்களது எண்ணத்தையும் சிந்தனையும் சுமந்தவர்களாக நாங்கள் பயணிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
சர்வதேசத்திடம் நாங்கள் வேண்டி நிற்பது, தமிழர்களுக்கான அந்த சுயநிர்ணய உரிமை கிடைக்க வேண்டும், தமிழர்கள் தமிழர்களை ஆள வேண்டும் என்கின்ற அந்த ஒரேயொரு தேவைப்பாட்டைத்தான் என தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் மற்றும் செயலாளர் கதிர்.செல்வபிரகாஸ் ஆகியோர் நினைவு கூர்ந்து கருத்துரையாற்றியுள்ளனர்.
இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் தவிசாளர்களான இ.ரூபசாந்தன்(நாவிதன்வெளி) , ஏ.தர்மதாஸ(ஆலையடிவேம்பு) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு கிளைச் செயலாளர் கதிர்.செல்வப்பிரகாஷ், கட்சியின் இளைஞரணி துணைச் செயலாளர் சட்டத்தரணி அ.நிதான்சன், சபை உறுப்பினர்களான வை.கோபிகாந்த், எஸ்.சிவகுமார், சீனு மற்றும் முன்னாள் கல்முனை மாநகரபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam