மட்டக்களப்பில் தசாப்தங்கள் பல கடந்தும் மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்த நெடுந்தீவு கணேசு (Video)
மட்டக்களப்பிலிருந்து பல சமூக சேவைகளைச் செய்து கடந்த 2013 ஆம் ஆண்டு மறைந்த பிரபல சமூக சேவையாளர் கணபதிப்பிள்ளை கணேசுவின் 10 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் (30.04.2023) அன்று இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நெடுந்தீவை பிறப்பிடமாகவும், மட்டு நகரை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கணேசு, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல சிவில் அமைப்புகளுடன் இணைந்து சமூக சேவைகளைப் புரிந்து வந்துள்ளார்.
கௌரவிப்பு விழா
கிழக்கு இந்து ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் கதிர்.பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை அவரது மகள் டொக்டர் தர்ஜினி நிகழ்த்தியதுடன், நீதிபதி இ.இராமக்கமலன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார், காந்திசேவா சங்கத்தின் தலைவர் அ.செல்வேந்திரன், மற்றும் அன்னாரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்ததுடன் நன்றியுரையை கணேசு பாலசுரேஸ் நிகழ்த்தியுள்ளார்.
இதன்போது மட்டக்களப்பு மத்தியஸ்த்த சபை தவிசாளர் சி.விஷ்ணுமூர்த்தி, விவசாய சங்கத்தின் தலைவர் ந.சுந்தரேசன், சமாதான தரகர் சொலமன் சில்வஸ்டர், சமூக செயற்பாட்டாளர் ச.முத்தம்மா, வித்தகர் க.விஷ்வலிங்கம், காந்திசேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி.அ.செல்வேந்திரன், சமூக வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் பணிப்பாளர் மு.ரகுநாதன் ஆயோரது சமூக சேவைகளைப் பாராட்டி “கணேசு” விருது வழங்கி, பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
ஆளுமைகளை பதிவு செய்து கொண்ட கணேசு
1942 ஆம் ஆண்டு ஆடித் திங்கள் 8ம் நாள் அன்று யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவில் பிறந்தார் கணேசு. தனது ஆரம்பக்கல்வியை கிளிநொச்சி உருத்திரபுரம் மகாவித்தியாலத்தில் பயின்ற அமரர் கணேசு அவர்கள் பாடசாலைக் காலங்களில் தனது ஆளுமைகளை பதிவுசெய்து கொண்டார்.
தனது SSC வகுப்பை இரட்டை சித்தியுடன் ஒரே தரத்தில் சிறப்புடன் நிறைவு செய்தவர்.
தொடர்ந்து நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் தனது உயர் கல்வியை நிறைவுசெய்து, உயர் சிறப்புச் சித்தியுடன் பேராதனை பல்கலைகழக பட்டதாரி படிப்பிற்கு நெடுந்தீவிலிருந்து தெரிவான முதல் மாணாக்கன் என்ற பெருமையையும், உருத்திரபுரத்தில் வாழ்ந்து சர்வகலாசாலை சென்ற முதல் இளைஞன் என்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டார்.
பல்கலைகழக கல்வியை சிறப்பாக நிறைவு செய்த கணேசு அவர்கள் 70 ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பு கரடியணாறு நெற் சந்தைப்படுத்தல் சபையின் நிர்வாக உத்தியோகஸ்தராக அரசாங்க சேவையில் இணைந்து கொண்டார்.
இவ்வாறு நிர்வாக உத்தியோகஸ்தராக ஆரம்பித்த கணேசு அவர்கள் நெற் சந்தைப்படுத்தல் திணைக்களத்தின் பிராந்திய முகாமையாளராக பதவியுயர்வு பெற்று பல மாவட்டங்களில் கடைமையாற்றினார்.
குடும்ப பின்னணி
தனது இறுதிக்காலம் வரை மட்டக்களப்பை தளமாகக் கொண்டே தனது பணிகளை ஆற்றி வந்தார்.
இந்நிலையில் காலத்தின் தேவை கருதி தும்பளையை சேர்ந்த இராசகுமாரி என்பவரை மணந்து மூன்று குழந்தைகளை ஈன்றெடுத்தார்.
மூத்த மகன் பாலகுமார் பிரித்தானியாவில் உளவியல் இளங்கலைமாணி பட்டம் பெற்று அங்கு பணியாற்றி வருகின்றார்.
அதேவேளை இரண்டாவது மகன் பாலசுரேஷ் அவர்கள் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி பட்டத்தை பெற்று மேற்படிப்புகளுக்காக பிரித்தானியா சென்று முதுகலைமாணி பட்டம் பெற்று, தற்போது லங்காஶ்ரீ ஊடகக் குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்டு வருகிறார்.
மூன்றாவது மகள் தா்ஷினி அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் பயின்று தற்போது கொழும்பு மாவட்டத்தில் மருத்துவராக மக்கள் சேவையில் இருந்து வருகிறார்.
பொது சேவைகள்
கணேசு அவர்கள் கிளிநொச்சி மகாதேவ ஆச்சிரமத்தின் பிரதம குரு ஶ்ரீமத் வடிவேல் சுவாமிகளுடனான தொடர்பினால் வேதாந்தம், சித்தாந்தம் போன்ற இந்துசமய கோட்பாடுகளை தெளிவாக கற்றுக்கொண்டார்.
அமரர் கணேசு அவர்கள் சுனாமி பேரழிவுக்கு பின்னர் பாதிப்புற்றோர் பணிமன்றம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அப்பாவி மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் முன்னின்று செயற்பட்டார்.
அதுபோன்று மட்டக்களப்பை தளமாக கொண்ட பல்சமய ஒன்றியம் என்ற அமைப்பினை உருவாக்குவதில் முன்னின்று பணியாற்றிய கணேசு அவர்கள் குறித்த அமைப்பில் அப்போதைய மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசன், துறவியான சுவாமி அஜாரத்மகானந்தா, திருமலை மட்டு மறைமாவட்ட ஆயர் கிங்லி சுவாம்பிள்ளை,ஶ்ரீ மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் மற்றும் மௌளவி அலியார் போன்றவர்களுடன் அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா ஆகியோரை ஒன்றிணைத்து குறித்த அமைப்பை வழிப்படுத்திய அதே சமயத்தில் அந்த அமைப்பின் பொதுச்செயலாளராகவும் மிக நீண்டகாலம் காத்திரம் மிக்க பணிகளை ஆற்றிவந்தார்.
வன்முறைகளுக்கு எதிரான பணி
யுத்தம் மிக மும்முரமாக இடம்பெற்று கொண்டிருந்த காலப்பகுதியில் தமிழ் சமூகம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள், இன வன்முறைகள் ஆட்கடத்தல்கள் போன்றவற்றிற்கு எதிரான சமாதானத்திற்கான பல்சமயங்களின் பேரவையின் செயற்பாடுகளில் அதன் செயலாளர் நாயகமாக அமரர் கணேசு அவர்களின் பணி காத்திரமானது என்றே சொல்லிக்கொள்ள முடியும்.
மட்டக்களப்பில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் கிழக்கு பல்கலைக்கழகம் வேறு பல்கலைக்கழகம் ஒன்றோடு இணைப்பதற்கு மறைமுகமாக எடுக்கப்பட்ட முயற்சியை மிகவும் சாதுர்யமாக கையாண்டு தொடர்ச்சியாக கிழக்கு பல்கலைக்கழகம் இயங்குவதற்கு வழியேற்படுத்தியவர்.
மட்டக்களப்பு மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள் கடந்த 2009ஆம் வருடம் மீளமைக்கப்பட்ட போது புதிதாக 20 மத்தியஸ்தர்கள் கணேசு அவர்களின் தலைமையில் இலங்கை நீதியமைச்சு நியமித்தது, இங்கு குறிப்பிட்டு கூறப்பட வேண்டிய ஒரு விடயம் எனலாம்.
அதே ஆண்டு தன் தனிப்பெரும் ஆளுமையின் திறமையால் இலங்கையில் செயற்படும் 334 மத்திய சபைகளுக்குள் முதன்மையான மத்தியஸ்த சபையே என்ற பெயரை மட்டக்களப்பு வரலாற்றில் பதிவு செய்தது.
மிக நீண்டகாலமாக மண்முனை வடக்கு மத்தியஸ்த சபையின் தவிசாளராக கணேசு அவர்கள் தனது பணிகளை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.
பெரும்பான்மையான மக்கள் தமது நேர விரயத்தையும் பொருட்படுத்தாது தமது பிணக்குகளை கணேசு அவர்களிடம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இருக்கும் அளவிற்கு அவரின் நடுநிலமையான நியாயம் வழங்கும் தனித்திறன் அனைவராலும் விரும்பப்பட்டது.
மதங்களுக்கிடையே சக வாழ்வை பேணுபவர்
இவ்வாறாக பல் சமூக சமய நல்லிணக்கத்தோடு சமூக ஒற்றுமைக்காக பணியாற்றிய அமரர் கணேசு அவர்களுக்கு ஶ்ரீ கல்யாணிவன்ச மகா நிகாயபீடம் “மதங்களுக்கிடையே சக வாழ்வை பேணுபவர்“ என்ற கௌரவத்தை வழங்கியிருந்தமையும் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய ஒர் சாதனையே.
அத்துடன் நின்றுவிடாமல் மட்டக்களப்பு அபிவிருத்தி சங்கத்தின் தலைவராகவும் இணையம் செயற்குழுவின் உறுப்பினராகவும் சமூக பணியாற்றிய அன்னாரின் சேவைகள் போற்றுதற்குரியதே.
ஒரு தசாப்தம் கடந்தாலும் நம் முன்னே வாழ்ந்த அமரர் கணபதிப்பிள்ளை கணேசு அவர்களை மட்டக்களப்பு மண் என்றும் மறவாது.
நாம் வாழும் சமூகம் நடப்பு நாட்களில் வாழ்ந்த பலரில் ஒரு சிலரை மாத்திரமே நினைவில் வைத்துக்கொள்வோம்.
அந்த வகையில் இன்று வரை பலர் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்து, எம்மை விட்டு பிரிந்து 10ஆண்டுகள் கடந்தாலும் எம் நெஞ்சங்களில் மட்டுமல்ல அறிந்த அனைவர் உள்ளங்களிலும் நீங்காத உத்தமர் கணேசு என்பதே நிஜம்.