எருவில் கிராமத்தின் அபிவிருத்தியை செய்ய முன்வாருங்கள்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை(Photos)
மழைக்காலங்களில் எருவில் கிராமத்திலுள்ள பெரும்பாலான வீதிகளில் வெள்ளநீர் வழிந்தோட முடியாமல் தேங்கிக்கிடப்பதனால் அவ்வீதியிலுள்ள மக்கள் தமது அன்றாட வேலைகளை மேற்கொள்வதற்கும், குறிப்பாகப் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள் குழந்தைகள், சிறுவர்கள். உள்ளிட்ட பலரும், மிகவும் அவஸ்தைப்படுவதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக எருவில் - பாரதிபுரத்தைச் சேர்ந்த தி.குமரன் தெரிவிக்கையில்,
நான் இக்கிராமத்திற்கு வந்து 17வருடங்கள் ஆகின்றன. அன்றிலிருந்து இன்றுவரை அபிவிருத்தி என்பது மிக மிகக் குறைவாகவேதான் உள்ளன. ஏனைய கிராமங்களில் பல வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல விடையங்கள் நடைபெறுவதாக அறிகின்றோம்.
ஆனால் எமது கிராம மக்கள் வருடாந்தம் வரும் மழை வெள்ளத்தின்போது குளத்தினுள் இருப்பது போன்று மண்மூட்டைகளைக் கட்டிக்கொண்டு வீடுகளுக்குள் நீர் உட்புகாவண்ணம் அரண் அமைத்துத்தான் வாழ்கின்றனர்.
இன்னும் சிலர் மழை காலத்தில் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். பின்னர் மழைகாலம் முடிந்ததும்தான் எமது வீதிகளைக் காணமுடியும். தேர்தல் காலத்தில் வேட்பாளர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து வாக்குகளைச் சேகரிக்கும் பணியில் தான் ஈடுபடுகின்றார்களே தவிர அவர்கள் வெற்றிபெற்றதும் எம்மைக் கவனிக்கின்றார்கள் இல்லை.
எனவே துறைசார்ந்தவர்கள் இதனைக் கருத்திற்கொண்டு எமது கிராமத்தின் அபிவிருத்தியை உற்றுநோக்கிச் செய்து தந்தால் அது எமக்கு பெரும் உபகாரமாக அமைந்துவிடும்'' இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
எருவில் கிழக்கு- பாரதிபுரத்தைச் சேர்ந்த நிசாந்தன் தெரிவிக்கையில்,
எமது கிராமத்தில் வீதி அபிவிருத்தி என்பது மிக மிகக் குறைவாகவே உள்ளன. பெரும்பாலான வீதிகள் இற்றைவரையில் பள்ளமும் மேடுமாகவும், சேறும் சகதியுமாகத்தான் காணப்படுகின்றன. மழை காலத்தில் இங்குள்ள பெரும்பாலான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கிவிடும், இதனால் வீதிகளால் பயணம் செய்ய முடியாத நிலைமைக்குத் தள்ளப்படுகின்றோம்.
இது வீதியா அல்லது குளமா எனும் நிலைமைதான் காணப்படும், வீதிகளுக்குப் பெயர்ப்பலகைகூட இல்லாத நிலையில் முறையான வடிகான் வசதிகள் இருந்தால் வெள்ளநீர் விரைவாக வழிந்தோடிவிடும். வீதி அபிவிருத்தி குறித்தும், ஏனைய வீதி மின்விளக்குகள் உள்ளிட்ட பல விடையங்கள் குறித்து மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையிடம் நாம் எழுத்து மூலம் தெரிவித்தும் எமது கிராமத்தில் எதுவும் முறையாக இடம்பெறவில்லை.
எனவே பிரதேச சபையோ அல்லது பிரதேச செயலகமோ முன்வந்து எமது கிராமத்தின் அபிவிருத்தியைப் பெற்றுத்தருமாறும், எமது கிராமத்தில் தொழில் முயற்சிகளுக்கு ஏற்ற ஊக்குவிப்பு விடையங்களையும் பெற்றுத்தருமாறு, வேண்டுகின்றேன்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அப்பகுதியை சேர்ந்த 72 வயதுடைய த.கண்ணகை தெரிவிக்கையில்,
மழை பெய்யத் தொடங்கிவிட்டாலே எமக்கு மிகவும் பயங்கரம் ஏற்பட்டுவிடும். எமது வீதியால் இடுப்பு அளவிற்கு வெள்ளநீர் வந்துவிடும்.
ஒரு பக்கமும் வெளிறே முடியாத நிலைமையைத்தான் நாம் வருடாந்தம் மழைக் காலத்தில் எதிர்கொள்வது வழக்கமாகி விட்டது. வயது முதிர்ந்த காலத்தில் நோயின்றி வாழ்வதற்காக வேண்டியாவது எமது கிராமத்திலுள்ள வீதிகளைச் செப்பனிட்டு, வடிகான் வசதிகள் செய்து தருமாறு கேட்டு கொள்கிறேன்'' இவ்வாறு கூறியுள்ளார்.
இது இவ்வாறு இருக்க அக்கிராமத்தின் வங்களாவடி வீதியின் இருமருங்கிலும் உள்ளவர்கள் அவ்வீதியையும் சேர்த்து அடைத்து வைத்துள்ளதானால் அவ்வீதி ஒற்றையடிப்பாதை போன்று காணப்படுவதாகவும், இதனை அகலப்படுத்தித் தருமாறு அப்பகுதி மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை அமர்வில் அக்குறித்த வீதியை அகலப்படுத்துவது எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள போதிலும் அது இற்றைவரையில் நடைமுறைப்படுத்தப்பட வில்லை எனவும் அங்குள்ள மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
வெள்ளநீரை வெளியேற்றுவதில் இரு கிராமத்தவர்களிடையே முறுகல்
மழை காலங்களில் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதனால் பல வீடுகளுக்குள்ளும் நீர் புகுவது வழக்கமாகவுள்ளது. இதனால் அங்குள்ள கர்ப்பிணி தாய்மார்கள், சிறுவர்கள், குழந்தைகள் என பலதரப்பட்ட மக்களும் மிகுந்த இன்னல்களை எதிர்கொண்டு வருவது வழக்கமாகி விட்டது.
இந்நிலையில் அப்பிரதேசத்தில் அமைந்துள்ள பட்டிருப்பு, எருவில் பகுதியில் தேங்கிநிற்கும் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு மண்முனை தென் எருவில் பிரதேச சபையினர் பெக்கோ இயந்திரத்துடன் குறித்த இடத்திற்குக் கடந்தவாரம் சென்றிருந்தனர்.
எனினும் வெள்ள நீரை வெளியேற்றுவது தொடர்பில் பட்டிருப்பு மற்றும் எருவில் கிராம மக்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
அவ்விடத்திற்கு வருதை தந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் சா.அறிவழகன், கிராம சேவை உத்தியோகஸ்தர், களுவாஞ்சிகுடி பொலிஸார் விஜயம் செய்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.
இறுதியில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அபேய விக்கிரம ஸ்தலத்திற்கு விஜயம் செய்து இரு கிராமத்தவர்களுடனும் கலந்துரையாடி மக்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் வெள்ள நீரை வெளியேற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கியதற்கிணங்க பிரதேச சபையினரால் வெள்ளநீர் வட்டி வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இது தொடரில் மண்முனை தென்எருவில்பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தெரிவிக்கையில்,
குறித்த கிராமத்தில் வீதி அபிவிருத்தி தொடர்பில் கரிசனை செலுத்த வேண்டியது பிரதேச சபையாகும். எனினும் பிரதேச செயலகத்தால் அப்பகுதிக்கு வீதி அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடுகள் வந்துள்ளதா என்பது தொடர்பில் தான் பரிசீலனை செய்ய வேண்டும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுவின் உபதலைவருமான ப.சந்திரகுமார் தெரிவிக்கையில்,
மக்களின் கோரிக்கைகள் இவ்வாறு அமைக்கின்ற இந்நிலையில் தற்போது வீதி அபிவிருத்திச் செயற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் எருவில் கிராம மக்களின் வேண்டுகோளிற்கிணங்க மக்களால் தெரிவு செய்யப்படும் 8கிலோமீற்றர் வீதிகளைப் புனரமைப்புச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளோம். அபிவிருத்தியின்பால் நாம் எதுவித கட்சி வேறுபாடுகளும் அற்ற முறையில் மேற்கொண்டு வருகின்றோம்.
எருவில் கிராமத்தில் செப்பனிடப்படவுள்ள வீதி அபிவிருத்திப் பணிக்கு அங்குள்ள மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும் '' இவ்வாறு கூறியுள்ளார்.
எருவில் கிராம மக்கள் எதிர்பார்ப்பதெல்லாம் ஏனைய கிராமங்கள் அபிவிருத்தியின்பால் முன்னேறுவது போன்று வீதி அபிவிருத்தி, மின்விளக்குகள், தொழில் முயற்சிகள், உள்ளிட்ட அனைத்து விடையங்களையும் உள்ளடக்கியவாறு, தமது கிராமமும் படிப்படியான பரிணாம வளர்ச்சியை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுவே.
மேற்படி
பிரதேச செயலாளர் மற்றும் அபிவிருத்திக்குழுவின் உபதலைவர் ஆகியோரின்
கருத்துக்கிணங்க எருவில் கிராமத்தின் அபிவிருத்திகள் கருத்திற்
கொள்ளப்பட்டாலும், அம்மக்கள் எதிர்பார்க்கும் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு
அது நடைமுறைச் சாத்தியமாகும் பட்சத்திலேயே அது அம்மக்கள் எதிர்பார்த்த நிலையான
அபிவிருத்திக்கு வழிகோலும் எனலாம்.










