திரவ உணவுகளுக்கான வண்ணக்குறியீடு விதிகளில் திருத்தம் - வெளியான விசேட வர்த்தமானி
சர்க்கரை கலந்த திரவ உணவுகளுக்கான வண்ணக் குறியீடுகளைக் குறிப்பிடுவது தொடர்பான விதிமுறைகளைத் திருத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதிய திருத்தங்கள்
1980 ஆம் ஆண்டின் 26-ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் 32-ஆம் பிரிவின் கீழ் இந்த திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
புதிய திருத்தங்களின்படி, சர்க்கரை கலந்த திரவ உணவுகளின் பொட்டலங்களில் காட்டப்பட வேண்டிய சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை வண்ணக் குறியீடுகளின் வடிவமைப்பு மற்றும் காட்சிப்படுத்தல் தொடர்பாக புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, 100 மில்லிலிட்டருக்கு 8.0 கிராமுக்கு மேல் சர்க்கரை உள்ள பானங்களுக்கு சிவப்பு நிறமும், 2.5 முதல் 8.0 கிராம் வரை சர்க்கரை உள்ள பானங்களுக்கு ஆரஞ்சு நிறமும், 2.5 கிராமுக்குக் குறைவாக சர்க்கரை உள்ள பானங்களுக்குப் பச்சை நிறமும் பயன்படுத்தப்பட வேண்டும்.
மாற்றுச்சின்னமும் அறிமுகம்
கண்ணாடிக் குப்பிகளில் இடம் குறைவாக உள்ள சமயங்களில் பயன்படுத்தக்கூடிய ஒரு மாற்றுச் சின்னமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்கள், நுகர்வோர் தாங்கள் அருந்தும் பானங்களில் உள்ள சர்க்கரையின் அளவை எளிதில் புரிந்துகொள்ள உதவுவதோடு, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவிக்கவும், தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தவும், உணவு லேபிளிங்கை சர்வதேசத் தரங்களுக்கு இணையாகக் கொண்டுவரவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.