ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு - பொலிஸார் தீவிர தேடுதல்
காலிமுகத்திடல் அமைதிப் போராட்டத் தளத்தின் மீதான தாக்குதலின் பிரதான சந்தேகநபராகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக தகவல் கிடைத்த பல இடங்களில் விசேட பொலிஸ் குழுக்கள் சோதனை நடத்திய போதிலும் இதுவரை சந்தேக நபரை கைது செய்ய முடியவில்லை என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை நீதிமன்றம் பெயரிட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மேலும் ஒரு குழுவை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை என்பன முற்றுகையிடப்பட்டு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
அமைதிப் போராட்டத் தளத்தின் மீது தாக்குதல்
அத்துடன், ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் எனவும் மக்கள் கோரிவருகின்றனர். இவ்வாறான நிலையில், காலிமுகத்திடல் அமைதிப் போராட்டத் தளத்தின் மீது கடந்த மாதம் 9ம் திகதி அரசாங்க ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதனால் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. பல நூறு கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகள் சேதமாக்கப்பட்டன. இந்த வன்முறையில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த வன்முறைக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்களே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள பின்னணியில் பலர் கைது செய்து செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.