அமரகீர்த்தி அத்துகோரளவின் மரணம் தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ள நாமல் ராஜபக்ச!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் வெளியான ஆரம்பக் கூற்றுக்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நிட்டம்புவவில் இடம்பெற்ற வன்முறையின் போது அமரகீர்த்தி அத்துகோரள தற்கொலை செய்துகொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எவ்வாறாயினும், அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்டதாக சட்ட வைத்திய அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையிலேயே, அமரகீர்த்தி அத்துகோரளவின் மரணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, “மாண்புமிகு எம்.பி.அமரகீர்த்தி அத்துகோரள தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது வைத்திய பரிசோதனையில் அது வேறுவிதமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த அடிப்படையில் இது தற்கொலையாக சித்தரிக்கப்பட்டது என்ற கேள்விகள் எழுகின்றன. இது தற்கொலை என்று ஊடகங்களுக்கு தெரிவித்தது யார்? என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
The death of Hon. Amarakeerthi Athukorale was initially reported as a suicide, now however the medical examinations have proved otherwise. This begs the questions on what basis was it portrayed as a suicide? & who informed the media that is was a suicide?
— Namal Rajapaksa (@RajapaksaNamal) May 14, 2022
கடந்த திங்கட்கிழமை, காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசாங்க ஆதரவாளர்கள் தாக்கியதை தொடர்ந்து நாட்டில் வன்முறை வெடித்தது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை நிட்டம்புவவில் தனது காரைத் தடுத்தவர்கள் மீது அமரகீர்த்தி அத்துகோரள துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அமரகீர்த்தி அத்துகோரள கட்டிடமொன்றில் தஞ்சம் அடைய முயன்றதாகவும், சுமார் 5000 பேர் சுற்றிவளைத்த பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகவும் பொலிஸார் கூறியிருந்தனர்.