கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இந்திய பாதுகாப்பு செயலாளர்
பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் சிஎஸ்சி என்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் முக்கிய பங்கை இந்திய பாதுகாப்பு செயலாளர் அஜீத் குமார் டோபால் வலியுறுத்தியுள்ளார்.
மொரிஷியசில் உள்ள போர்ட் லூயிலில் நேற்று(07.12.2023) இடம்பெற்ற ஆறாவது மாநாட்டு கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவுகள் ஆகியன கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பான முத்தரப்பு கூட்டத்தின் நோக்கத்தையும் உறுப்பினர்களையும் விரிவுபடுத்த ஒப்புக்கொண்டபோது 2020 இல் கொழும்பு பாதுகாப்பு மாநாடு நிறுவப்பட்டது.
கொழும்பு பாதுகாப்பு மாநாடு
இதில் இந்தியா, மாலைத்தீவுகள், மொரிஷியசில், இலங்கை என்பன உறுப்பு நாடுகளாக உள்ளன. பங்களாதேஷ மற்றும் சீசெல்ஸ் ஆகியவை பார்வையாளர்களாக உள்ளன.
இந்தநிலையில் மொரிஷியசில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான நடவடிக்கைகளின் வரைபடம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாதம், தீவிரவாதத்தை எதிர்த்தல், கடத்தல், நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்து போராடுதல், இணைய பாதுகாப்பு, முக்கியமான உள்கட்டமைப்பு பாதுகாப்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட ஐந்து தூண்களில் கொழும்பு பாதுகாப்பு மாநாடு கவனம் செலுத்துகிறது..