தமிழ் பொது வேட்பாளருக்கு முன் அரசியல் அபிலாசைகளை தீர்மானியுங்கள்: மனோ எம்.பி. வலியுறுத்து
தமிழ் பொது வேட்பாளரை அடையாளம் காண முன், தமிழ் பொது அரசியல் அபிலாசைகள் என்ன என்பதைத் தமிழ்க் கட்சிகள் தீர்மானிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று (09.04.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் தெரிவித்ததாவது, "கடந்த காலங்களில் தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு - கிழக்கு ஈழத்தமிழ் உடன்பிறப்புகள், தென்னிலங்கை தமிழ் வேட்பாளர்களுக்கு தாராளமாக வாக்களித்தார்கள். ஒருமுறை தேர்தலைப் பகிஷ்கரித்தார்கள்.
இந்த இரண்டு செயன்முறைகளும் எதிர்பார்க்கப்பட்ட பயன்பாட்டைத் தராத காரணத்தால்தான், இன்று தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற யோசனை முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்படுகின்றது.
இதன் சாத்தியப்பாடு, பயன்பாடு தொடர்புகளில் கவனமாக ஆராய வேண்டும். இவ்விதமாகத் தமிழ் பொது வேட்பாளர் போட்டியிடுவார் எனில் அவருக்குத் தமிழ்
வாக்காளர்கள், குறிப்பாக வடக்கு - கிழக்கு தமிழ் வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக
வாக்களிப்பார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்ப் பொது வேட்பாளர்
அடுத்தது, இதன் மூலமாக முழு உலகுக்கும் இலங்கைத் தமிழர்கள் சார்பில் என்ன சொல்லப்படவுள்ளது என்பது தீர்மானிக்கப்பட வேண்டும்.
தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் சில கட்சிகள், இன்று ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் எனக் கோருகின்றன.
அவற்றின் சாத்தியப்பாடு, பயன்பாடு தொடர்பில் பல்வேறு கருத்தோட்டங்கள் இருக்கின்றன. ஆனால், இத்தகைய கருத்துக்களை முன்வைக்க, அந்தக் கட்சிகளுக்கு உரிமை இருக்கின்றது.
ஆனால், பகிஷ்கரிப்பு வேண்டாம். தமிழ்ப் பொது வேட்பாளர் வேண்டும் என்று சொல்பவர்கள், அதன்மூலம் உலகத்துக்கு என்ன சொல்ல விரும்புகின்றார்கள் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
குறைந்த பட்ச அல்லது அதிக பட்ச கோரிக்கைகள், நிலைப்பாடுகள், அபிலாசைகள் என்ன? என்பவை பற்றி உரையாட வேண்டும்.
இன்னமும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அதற்கிடையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறலாம்.
மறுபுறம், தேர்தல்கள் ஆணையாளர் என்ன சொன்னாலும் கூட, ஜனாதிபதித் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் ஒருசேர நடந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ஆகவே, இவை அனைத்தையும் கணக்கிலெடுக்க வேண்டும்.
இதற்கிடையில் எனது பெயரும் தமிழ் பொது வேட்பாளர் பரிசீலனையில் முன்மொழியபட்டுள்ளது.
பொது அரசியல் பரப்பில் நாடறிந்த தமிழ் கட்சித் தலைவராக நான் இருக்கின்ற காரணத்தால் இப்படியான ஒரு யோசனை சொல்லபடுகின்றது. இதைச் சொல்ல எவருக்கும் உரிமை உண்டு. இது பற்றி நானும், எனது கட்சியும்தான் தீர்மானிக்க வேண்டும்.
இந்நிலையில் தமிழ் பொது வேட்பாளரை அடையாளம் காண முன், தமிழ்ப் பொது அரசியல் அபிலாசைகள் என்ன எனத் தீர்மானிக்க வேண்டும் என்பது தான் பிரதானமான தேவைபாடாகும்" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |