வவுனியாவில் கோடிக்கணக்கு பெறுமதியான சோள விதைகளை விற்பனை செய்யமுடியாத நிலை
வவுனியாவில் உற்பத்தி செய்யப்பட்ட 1 கோடி 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய கலப்பின சோள விதைகளை விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
புதிய கலப்பின சோள உற்பத்தியானது பூவரசன்குளம், குருக்கள் புதுக்குளம், மணியர்குளம், எருக்கலம்கல், வேலங்குளம், பாவற்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் வரையிலான நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்டுள்ளது.
சோளச் செய்கை
சோளச் செய்கையில் ஈடுபட்டவர்கள் கலப்பின சோள விதைகளை பதப்படுத்தி அதனை நெளுக்குளம் பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட சோள விதை உற்பத்தி களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தி வைத்துள்ள போதும் குறித்த சோள விதைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக சோள உற்பத்தியில் ஈடுபட்ட விவசாயிகள் பலரும் பெரும் நட்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுள்ளனர்.
தற்போது சிறுபோக பயிர்செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும், ஏற்கனவே சோள உற்பத்தியில் ஈடுபட்ட விவசாயிகள் தவிர ஏனைய விவசாயிகளுக்கு சோளப் பயிற் செய்கை மேற்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளையும், ஆலோசனைகளையும் சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் முறையாக மேற்கொள்ளாமையால் குறித்த சோள விதைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
மேலும் தொடர்ந்தும் இந்த நிலை நீடித்தால் அதன் முளை திறன் குறைவடைந்து அவற்றை கைவிட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |