சொகுசு கார் மோதி இரு பெண்கள் பலி - தப்பியோடிய சாரதி சிசிரிவி காட்சிகளின் உதவியுடன் மடக்கிப்பிடிப்பு
கொழும்பு, ஹங்வெல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பல்கம – பனாகொட வீதியில் நேற்று இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் தப்பிச்சென்ற சொகுசுக்காரின் சாரதியை, சிசிரிவி காட்சிகளின் உதவியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளில் வெளியான தகவல்
விபத்து இடம்பெற்ற சமயத்தில் குறித்த காரின் சாரதி கடும் மதுபோதையில் இருந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

இது குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பனாகொட பகுதியிலிருந்து அம்பல்கம நோக்கி அதிவேகமாகப் பயணித்த சொகுசுக் கார் ஒன்று, அதே திசையில் வீதியின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது கொடூரமான முறையில் மோதியுள்ளது.
விபத்து நேர்ந்த உடனேயே காரை நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முயலாமல் சாரதி காரை அதிவேகமாகச் செலுத்திச் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த இரு பெண்களும் அங்கிருந்த பொதுமக்களால் மீட்கப்பட்டு, உடனடியாக நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
உயிரிழந்தவர்கள் ரணால பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணும், கிராந்துருகோட்டை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த வீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமரா பதிவுகளைக் கொண்டு ஹங்வெல்லை பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் பலனாக, விபத்தை ஏற்படுத்திய காரைக் கண்டுபிடித்துக் கைப்பற்றியதுடன், தலைமறைவாகியிருந்த சந்தேகநபரான சாரதியையும் பொலிஸார் மடக்கிப்பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதிக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் மது அருந்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கொடூர விபத்து மற்றும் சாரதியின் பொறுப்பற்ற செயல் தொடர்பில் ஹங்வெல்லை பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.